நள்ளென் யாமத்து ....
நிதான மனிதன் ஆக இருந்து ரசிப்பது
ஒரு பகுதி வாழ்க்கை என்றால்
பைத்தியக்காரன் ஆகி
இன்னும் பல பகுதிகளை ரசிக்கிறேன்
நான் ஒரு வேளை
வால்ட் விட்மனின் அவதாரமோ
என்று நினைக்கிறேன்
ஒரு கட்டுப்பாடும், ஒரு நிர்பந்தமும்,
ஒரு கண்மூடித்தனமும் அற்ற வாழ்வு
என்னுடையது
மதம் முழுக்க முழுக்கத் தெரியும்
ஆனால் நான் எந்த மதவாதியும் இல்லை
பக்தி ஆன்மிகம் ஆழமாகவே தெரியும்
ஆனால் நான் எதிலும்
கட்டுண்டவன் இல்லை
சுதந்திரமான மனிதன்
என்னைவிட யாரும் இல்லை
என்றே நினைக்கிறேன்
அனைத்தின் சாரங்களும் கற்று
அனைத்து உலகங்களினுள்ளும்
போய் நுழைந்து
ஆஹா
இந்த நாடோடி வாழ்க்கை
எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது
பல உயிர்கள் பல வழிகள்
ஆனால் அன்பில் அனைத்தும் ஒன்று
நான் ஒரு வகைப்படுத்த முடியாத ஒரு ரகம்
ஏதாவது வகைப்பாடு வேண்டும் என்றால்
கவிஞன்
அதுதான் என் வகை
சுதந்திர மனிதன்
எதிலும் வெறுப்பு இல்லை
விலக்கு இல்லை
எதிலும் பந்தமும் இல்லை
உயிர் நட்பு ஒன்றுதான்
வந்து சேரும் கூடு
அறிவு பிடிக்கும்
அறியாமை பிடிககாது
அன்பு பிடிக்கும்
அடிமைத்தனம் பிடிக்காது
பாசம் பிடிக்கும்
பிணைப்பு பிடிக்காது
ஆனால்
அறியாமையும் பிடிக்கும்
அடிமைத்தனமும் பிடிக்கும்
பிணைப்பும் பிடிக்கும்
என்ற பித்த நிலை
அடிக்கடி வந்து வந்து போகிறது.
தெளிவு சில சமயம் பிடிக்கிறது.
கலக்கமும் சில சமயம்
பிடிக்கவே பிடிக்கிறது.
ஏதுமற்ற அநாதையாய்
என்வழிப் பயணம் நீள்கையில்
துன்பக் கற்களும்
இன்பச் சாரலும் வீசி
வழித்துணையாகி வருகின்ற
அந்தக் கருநிறத் தோழி நீதானோ!
காலம் உண்டுமிழ்ந்த
கண்டம் கருத்தவளே!
கோலம் கொண்டெழுந்த
கொள்ளையிருள் பேரழகீ!
வாலைக் குமரீ!
மயிற்பீலி மறைக்காத
கொண்டை குலுங்கவந்து
அண்டத்தகத்தும் புறமாகி
எண்கடந்த மேனியளே!
உள்கடவா அன்பின்
ஊற்றான அருட்துறையே!
காற்றாகி நின்று ககன வெளியெங்கும்
பெற்றுப் புறந்தருமோர் சின்மயமே!
உற்ற மனத்துணையே!
உவகை கற்றுவரும்
உள்ளத்துப் பைஞ்சுடரே!
நள்ளென் யாமத்து
மழையாகி நிற்பாய்ப் பரிந்து.
***
No comments:
Post a Comment