Friday, February 26, 2016

கொடுங்கை முக மிருகம்

கொடுங்கை முக மிருகம்
என்னைப் பார்த்துச் சிரிக்கிறது.
நெடுங்கதை கூறாமல்
நெத்தியில் அடித்தால் போல்
அதன் ஒலியற்ற சிரிப்பு.
உள்ளத்தின் ஏடுகள் ஒப்புகின்றன.
ஒரு தனி வழிப்போக்கனாய்ப்
பாலை வாழ்க்கையில்
பருந்துகளின் ஸ்நேகம்;
படுத்து உறங்குங்கால்
அவற்றின் கிசுகிசுப்பு காதில்:
’பட்டிக்காட்டான் இறந்துவிட்டானா பார்!
அவன் இதயத்தின் சதை எனக்கு மட்டும்.
பாவம் அன்புக்கு ஏங்கியே
இறந்தவனின் இதயம்
இளமையாய் இருக்கும்.
இன்சுவைக் கோது’
விழித்ததும் யதார்த்தங்கள் உறங்கிவிடுகின்றன.
வினைகள் முழித்துக்கொள்கின்றன.
தண்டனைக் கைதியாய்த் தள்ளாடும் உயிர்;
தலை சாய்க்க ஒரு தாயின் மடி தேடும்;
சாய்த்திடின் அது முள்மரம் ஆகும்;
தாகம் தீர்க்கக் கண்களும்
கடுநெஞ்சம் கொண்ட வெப்பம்;
நிழல் என்று கண்ணுக்குத் தோன்றி
நீளும் அழலாய் நிதர்சன அனுபவங்கள்
மூளும் வினைமுகட்டில்
மூர்க்கம் கொள்ளும்;
ஓயாமல் மூட்டி எரித்து
என்னை அடுப்பாக்கிச் சமைக்கும்
கைகளும் புரிவதில்லை;
சமைக்கும் பதார்த்தமும்
யாதெனத் தெரிவதில்லை;
யாருண்ண இந்த உயிரின் வேகல்?
பாருண்ண ஒருநாள் விழும் உடலோ
பாவம் பாமரமாய்ச் சிரிக்கிறது;
பக்குவம் வரும் வரையில்
பாழும் மனமும் துடிக்கும்;
மொக்குள் வாழ்க்கையில்
முளைத்த இடமெல்லாம் பெருங்கதை;
சிக்காப் பொருளாய்ச் சீவன்
சக்கைகளை மென்று சளைக்கிறது;
அருளின் அக்கறையும் ஒரு நாள் பிறக்கலாம்;
மருளே பழகிப் போனபின்
மனம் வருமா அன்று
அருளே அந்நியமாய்த் தோன்றுமோ என்று
ஐயமும் புதிர்ப் புன்னகையாய்ப்
புரையோடி, யார் நினைத்தாரெனத்
தலைதட்டிக் கொள்கிறதோ
தீராத எதிர்பார்ப்பில் தீர்க்க சிந்தனையாய்?
போகட்டும் விடு என்று சொல்லப்
பழகிப்போன குரல்கள் இல்லை;
சாகட்டும் விடு என்று தள்ள
ஜீவிதம் ஜீர்ணம் ஆகவில்லை;
சர்வம் துக்கம் என்றுரைத்த
சித்தார்த்தன் பொய்யுரைக்கவில்லை;
வானும் வழியும் சூழலும்
ஒரே பகலாய்ப் பொடிக்கும் கோடையில்
நிழல் ஒரு கொடுமை
கிடைத்தாலும் கிடைக்காமல் போனாலும்;
ஊன்பொதியென உடல் சுமந்த உயிர்க்கும்
ஊழ்ப்பொதியென வினைசுமந்த எனக்கும்
தான் பொருளெனக் காட்டும் தண்ணருள்
ஏன் வரவேண்டும் என்ற
எந்த நியதியும் இல்லை இயற்கையில். 

***

No comments:

Post a Comment