Saturday, February 27, 2016

தசரதன் புலம்பல்

ஆட்சி இருக்கோ இல்லையோ
மன்னனாக இரு.
நாடு இருக்கோ இல்லையோ
ராணியாக இரு.
என் மனமெனும் ராஜ்யத்திற்கு
நான் அரசன்;
என் இதயக் கோவிலில்
எவருக்கும் இடமில்லை
எனக்கும் கூட
என் உள் உயிரைவிட்டு
நான் மறந்ததால்;
உன் நிலா முற்றத்தில்
நடை பயில்வன நாளை
கடல் தாண்டிப் பறக்கலாம்;
அடல் வெங்களத்தில்
குடல் சாய்ந்த வீரனுக்குப்
பணியாளாய் நான் உழைக்கலாம்;
அவன் விழித்த பின்னர்
மன்னனா என்ற வியப்பின் விழியன்று
என் பெருமிதம்;
அவனுக்குச் செய்த தொண்டில்
திரும்பிய நினைவில் இருக்கிறது
என் உள்ளச் சந்நிதியின்
ஒரு கால பூஜை;
பெண்ணிற்கு முன் நான் பூவாவதிலும்
பெண்கள் என்னை விரும்பிச் சூடவோ
அன்றிப் பெண்மையின் பதமலரில்
தூவித் தொழும் இதழ்களாய்
வீழ்வதிலோ இருக்கிறது என் பீடுடைமை;
காமக் கொடும் அனல் வெதுப்ப
அழுதனர் என் நாட்டின் பெண்கள் அன்றித்
துன்பத்தின் கீற்றும் அவர்தம்மைக் கீறி
வலியில் அழுதனர் என்பது
என் அகால மரணப் படுக்கை;
பறவைகளும் என்னை உறவு கொண்டாடும்;
துறவிகளும் என் அரண்மனையில்
தவக்குடில் அமைப்பர்;
உயர்ந்த கடவுள் எனை உவந்து
பெற்றவனாய் ஆக்கும்;
ஊர் கூடி மகனுக்கு
உரிமையாக்கச் சொல்லும்;
சீர் பொங்கும் திருவின்
மணக்கோலம் காணும்
கண்ணிடைத் தூசியெனக்
கூன் விழுந்து செல்லும்
ஊழ் உதிர்த்த ஒற்றைச் சொல்
உள்ளிருந்து வாட்டும்;
கள்ளக் காதிட்டுக் காலம்
கதை பரப்பி நீளும்;
கானுக்கு ஏகென்று சொன்னேன்
என்ற சொல் கேட்டு அந்தத் தூயோன்
வென்ற வில் பூட்டும் தொனியில்
சென்ற நினைவு மீண்டு நானும்
வென்றேன் என்று இறுமாந்திருத்தலன்றி
வெங்கானம் சென்ற பிள்ளை
வேதனைபட்ட உள்ளம்
கன்றிய மனத்தென் மருமகள்
கனன்று வெறுக்கும் என் மகன்
அனன்று ஒதுக்கும் அவள் மகன்
அண்ணன் வழி நின்ற கன்று
இதுதான் என் வாழ்வாக ஆனதோ?
இதனினும் சுட்டதோ பெருங்காடு?
தாரமும் தம்பியும்
தண்ணலத்துத் தோழரும்
தொண்டே தொழுகையாய்த்
தொடர்ந்த பெரியோனும்
அடர்ந்த கானில் திரிதர விடுத்த
எனக்கும் எங்கும் இருப்புதான் கொள்ளுமோ
காடெலாம் திரிதரும்
கடும் துன்பம் இனிக்கும்;
கழுவாய் என என்மனம் மகிழும்;
அவன் என்னை நாடி வருதலும் வேண்டேன்;
அப்பனாய் ஆகி என் சுகம் கண்டேன்?
என் மனம் இழந்து அவன் வனம் புகுந்து
கல் மனம் தந்தைக்கென்று
கணம் கணம் தொறும்
நினைத்திருந்தான் கொல்
என்னும் எண்ணம் என்னை இன்றும் வாட்டும்;
போ என்னை விட்டுப் போய்விடு;
பரமனும் வேண்டேன், பக்தியும் வேண்டேன்;
தன் உரமதால் உலுத்தனைக் கீறி
உயிர்விட்ட என் தம்பியின் உதிரமும்
உதிர்ந்த சிறகும் உருகெழு கானிடைக் கிடைக்கும்;
அன்று என் ஆவி துஞ்சட்டும்;
அது வரை திரிதருவேன்
இக்கானகமெங்கும்
முக்காலமும் உயிர் சுமந்த நனவாய்
உள்ளம் முறிந்த கனவாய்;
போ போய்விடு;
பரமனைப் பாடு;
பக்தியைத் தேடு;
பரிதவிக்கும் ஒரு தந்தையின்
பாவமும் உண்டு என்று
என்றேனும் கூறு. 

***

No comments:

Post a Comment