Friday, February 26, 2016

இலக்கு

கால் கடுக நடந்து நடந்து
என்னைத்தான் நான் வந்து சேருகிறேன்;
எனக்கு முன்னமே என்னுள் வந்து
அமர்ந்துவிட்டாய்,
அந்த மாயம்தான் போகட்டும்;
நெருப்பிலும், சேற்றிலும்,
புயலிலும், வெள்ளத்தும்
புன் விலங்காய் அலைந்த காலத்து
என் செவிப்படச் சிந்தை தைக்க
என் அலைச்சலின் முடிவு நான் என்று
ஏனோ நீ கூறாமல் இருந்தனையோ?
குடராட்டினம் சுற்றவிட்டுக்
குதுகலிக்கும் குழந்தையோ நீ?
கூரலகு கொத்திக் குடையும் புலன்கள்
வேருடன் என்னைக் கிழித்த பொழுது
பாரில் எதுவுமில்லா மாயத்தை
நீதானே விரித்தாய்? ஒரு வார்த்தை!
சரி நீ இல்லை என்றே
நான் வாதாடிக் களைத்தேனே
உள்ளேதானே இருந்தாய்? ஒரு கனைப்பு!
ஓராயிரம் காமங்கள், குரோதங்கள்
பேராமல் என்னுள் பொருதபொழுது
தேராத நிலையில்
தஞ்சம் என்று உன்னைக் கூவிய பொழுது
நானே விதைத்து அறுத்த வினையில்
என்னை நான் சிதை மூட்டிய கணங்களில்
அன்னை என்று சொல்ல
ஓர் ஆதரமேனும் நீ காட்டியதுண்டா?
எதை வைத்துச் சொல்வது
நீ அருளின் வடிவமென்று?
நடப்பதெல்லாம் நடக்கிறது,
உன் நமுட்டுச் சிரிப்பெனும் அகல்விளக்கில்;
படுவதெல்லாம் படுகின்றேன்
பார்மீது நீ என் உள்ளிருந்தும்;
அமைதி என்ற கள்ளத்தை
எள்ளி நகையாடும் உன் கோலம்;
குமைதல் என் வாடிக்கை;
கோடி அண்டங்கள் விழுங்கி உமிழும் உன்வாய்;
படைத்த உனக்கே வெட்கம் நான் என்றால்
பேசாமல் முழுங்கிவிடு; உமிழாதே;
உன்னுள் நான் இருந்தால்
உலகம் என்னைத் தொடாது;
உலகெல்லாம் புரப்பவளே!
ஓருயிரின் விலையென்ன?
போன காலம் எல்லாம் போக
இன்றாக ஏன் தயங்குகிறாய்?
ஐயோ என்ன பிச்சி இவள்?
பெற்ற உயிரைத் தான் விழுங்கும்
பெற்றியளே! என்று புவனம்
புன்னகைக்கும் என்றா பதட்டம்?
என்னாளும் என்னுயிரைக்
காவாமல் இருப்பதினும்
காளி என்ற நீல மேனி
தானீன்ற உயிரொன்றைத்
தன்னுள் வைத்துப் புரந்தாள்
என்று வையம் புகலாதோ?
தின்றுவிடு தாயே தயங்காதே! 

***

No comments:

Post a Comment