நிஜமும், காலமும்
நம் விருப்பப் படியெல்லாம்
அமைந்துவிட்டால் பரவாயில்லை
என்று எண்ணுகின்றோம்.
ஏதோ ஒரு விதத்தில்,
இன்றில்லையானாலும், என்றோ.
ஆனால் நம் விருப்பத்திற்குக்
காலமோ நிஜமோ
வளைந்து கொடுக்கிறதா?
வளைந்து கொடுப்பதுப்போல்
சில நேரம் பாசாங்கும் செய்கிறது.
நம்புகிறோம். ஏமாறுகிறோம்.
மீண்டும் ஒரு சின்ன நப்பாசை.
நிஜம் ஏதோ திருந்தி
நம் வழிக்கு வந்துவிட்டதுபோல்
ஒரு பிரமை.
நமக்கு நாமே
மறுதீர்மானம் போடுகிறோம்.
நாமும் கொஞ்சம்
நிஜத்திற்குத் தகுந்தால் போல்
விட்டுக்கொடுப்போமே என்று
கொஞ்சம் உடன்படு நயம் செய்து கொள்கிறோம்.
ஆனால் காலமும், நிஜமும்
நம்மைச் சிறிதும்
லட்சியம் செய்வதாகத் தெரியவில்லை.
உட்கார்ந்த யானை எழுந்த வேகத்தில்
தூக்கி எறியப்பட்ட
குட்டி நாய் போல் குரைக்கிறோம்.
ஆனால் கஜ கதியில்
காலம் போய்க்கொண்டே இருக்கிறது.
இந்த நான் நிஜம் காலம்
இவற்றுள் நடை பெறும் துவந்த யுத்தம்
இந்த விறைப்பு
இதைப் புரிந்து கொள்ளாமல்
திண்டாடுபவர் நீங்கள் என்றால்
ஒரு வேளை இந்தக் கவிதை புரியலாம்.
*
வாருங்கள்! விழிக்காதீர்.
நான் தான்.
நானேதான்.
முகம் சுளிக்காதீர்.
மாற்ற முயற்சித்து அலுக்காதீர்.
ஏமாற்றத்தால் எரிந்து வீழாதீர்!
என்னைக் கவிந்து உட்பொதிய
ஏன் இந்த விசுவ உரு முயற்சி
உங்களுக்கு?
பாட்டாளி வர்க்கமாய்ப் பட்டை கட்டி
ஏட்டைப் புரட்டி எக்காளம் நீர் போட்டாலோ
சந்தைச் சமன்பாட்டின் சௌக்கியத்தைச்
சிந்தை கொண்டு உம்
சீற்றக் கவண்கல்லைச்
சட்டை செய்யாதிருப்பேன் நான்.
சந்தைப் பொருளியலுள்
சந்துக் கடையாய் நீர்
என்னை ஆக்கி வைத்திடிலோ
‘என்ன கொடுமையிது?
உழைப்பின் உரமின்றி
உயர்வின் திரமேது?’
எனப்பொங்கி எழுந்து
எண்ணற்ற கையுயர்த்தி
எங்கெங்கும் கால்பாய
எல்லாம் மாற்றி வைப்பேன்.
ஏற்றமிகு புத்தூழி
இங்கே பிறந்ததென்று
தோற்றம் கொண்டு நீர்
தொடர்ந்து வந்திடிலோ
தொல்லுலகின் ஆழ்கிணற்றில்
அமிழ்ந்து போனவற்றை
அள்ளியெடுத்து
அரசோச்சச் செய்வேன் யான்.
என்ன இது! என்ற
சலிப்பில் நீர் சரிந்துவிட
மன்னர்களின் பெருமைகள்
முந்தையரின் பொற்காலம்,
தந்தையரின் தவறெல்லாம்
தங்கத் தகடுகளாய்த்
தற்கால உலகத்தின்
கூரைவேய முனைந்திடுவேன்.
கொல்லும்விழி கொண்டு
குரோதத்தில் நீர் கொதித்தாலும்
ஓதக்கடலினும் ஓயாமல் இரைந்தாலும்
ஒன்றும் பயனில்லை.
ஒன்றுக்கும் உதவாது.
சரிதான். சென்றெதெல்லாம் மீட்டுவரச்
சகுனங்கள் ஆகுதென்று
சரித்திரத்தைப் புனராக்கச்
சந்நத்தமாய் நீர் முனைந்து நின்றால்
சரித்திரத்தைச் சருகோடுச்
சுருட்டி எறிந்துவிட்டு
விரித்த புகழ்ப் புதுமை
வியப்பாய் விரிவேன் நான்.
மாற்றவெள்ளத்தில்
மண்டை காய்ந்து நீர்
ஆற்ற இனிதுடைத்து
அருமைப் பழங்காலமென
ஆற்றாதழுத கண்ணீர் உலர்ந்தபின்னே
ஒயாப் புதுமைக்கு ஒருக்களித்தே
ஓடும் புதுமையோடு நீர் ஓடுங்கால்,
‘பழமை செரிக்காத
புதுமை பயனில்லை’ என்றே
நின்று எதிர்த் திசையில்
நெடிது கணக்கிடுவேன்.
என்றென்றும் புதிராய்
உமக்கு எதிர்ப்படுவேன்;
எனை ஆள, ஏறிட்டு அளக்காதீர்!
என்னை அகப்படுத்த
ஏணிவைத்து விசுவ உரு காட்டாதீர்!
என்னில் நீர் ஒன்றன்றோ?
ஏனிந்த வீறாப்பு?
தன்முதுகின் மையத்தையே
தான் தொடுதல் சிரமம் என்றால்
எனை அமர்த்தும் பிரம்புக்கு
ஏன் கிடந்து அலைகின்றீர்?
இங்கே வாருங்கள்.
நான் தான்.
நானேதான்.
நான் நானாகவேதான்
இருந்தேன்,
இருக்கின்றேன்,
இருந்துகொண்டே தானிருப்பேன்.
***
No comments:
Post a Comment