Saturday, February 27, 2016

தீ ஆவளி

ஆதி உலகிடை ஆர்ந்தெழுந்த தீ
ஆதவர்க்கிடைக் காயந்தழன்ற தீ
கூதிர்கம்பனம் போக்கவந்த தீ
கோதிலாவகை ஆக்க வந்த தீ
நாதியுற்றிட முன்னடந்த தீ
நியதியுற்றிடப் பின்சுடர்ந்த தீ
வேதியல்விதி விரிவடைந்த தீ
ஓதுவாய்மையின் உள்ளமர்ந்த தீ
தீதிலாவகைத் திறலெழுந்த தீ
தாதுலாவகைத் தடையழித்த தீ
காதுலாக் கயல் விழியுமிழ்ந்த தீ
போதுலாக் கதிர் புலர்ந்துவந்த தீ
மீதுலாம் அலை குழைந்துவந்த தீ
வாதுலாம் நெறி விளங்கவந்த தீ
மாதுலாம் சடை ஆடவந்த தீ
மோதுமைம்புலன் சாம்பரான தீ
மீதுறாவகை மனமடங்கு தீ
பேதுறாவகைப் புலன்விளங்கு தீ
சேதமைத்து செல் சரம்துரந்த தீ
சூதமைத்தபுன் கூட்டழித்த தீ
ஊதுகின்றதோர் குழல்படர்ந்த தீ
ஓதுகின்றதோர் மெய்யடர்ந்த தீ
மாதமர்ந்ததோர் மலர்பழித்த தீ
ஊதைக் காற்றினில் உள்குமைந்த தீ
பேதைக் கோவியர் பிரிவடர்ந்த தீ
தீதிலா நெறித் தீப ஆவளித் தீ தீ தீ 

***

No comments:

Post a Comment