Saturday, February 27, 2016

அந்த ஒலி

நட்ட நடு ராத்திரியில்
விட்டுவிட்டுக் கேட்குமந்த
விண்ணின் ஒலி யாது? 

பட்டுப் பட்டுப் போகுமந்தப்
பண்ணின் ஒலிக் கவட்டுகளில்
தொட்டுத் தொட்டுத் தொடருகின்ற
பொருள் யாது? 

மட்டுப் படாதெங்கும்
கொட்டி நிறைந்த பொருள்
தட்டுப் படாமல் போகும்
மர்மம் யாது? 

கேட்டுவந்த கேள்வியெல்லாம்
கோத்துவாங்கி மாட்டுகின்ற
பூட்டவிழ்ந்த புதிருக்கும்
விடை யாது? 

நாட்டிவந்த நாயகத்தை
நானைவிட்டு நகர்த்திவைத்து
நோட்டம் விடும் நன்மையதன்
நாமம் யாது? 

ஓட்டிவந்த காலமெல்லாம்
உடன்புகுந்து உள்ளிருந்து
மீட்டுகின்ற பண்களுக்கே
மாட்டிநின்ற தந்திகளோ
நம் ஜீவன் எல்லாம்? 

மீட்டும் விரல் காணாமல்
பூட்டும் வில்லில் கோணாமல்
வாட்டும் வலி கனிந்துவந்தால்
வாய்மொழியும் பலித்திடுமோ? 

***

No comments:

Post a Comment