Friday, February 26, 2016

எழுத்தும் பணமும்

எழுத்துக்கும் பணத்திற்கும்
சம்பந்தம் இருக்கிறது தோழரே!
ஆயிரம்தான் சொன்னாலும்
பணம் வருகிறது என்று சொன்னால்
எழுத்து விரட்டி விரட்டி
வேலை பார்க்கிறது.
லஞ்சம் அன்று.
பணமுடிப்பு அன்று.
நயமன்று.
வாக்கரிசியன்று நான் சொல்லுவது
எரிபொருள்
ஆயிரமோ ஐந்நூறோ
அதன் மடங்கோ எதுவானாலும்
நான் எரிக்கும் நள்ளென் யாமத்துத்
தைலக் காசாய்ப்
பின்னூட்டாய்
நான் வாங்கும் நூலின்
அட்டை போடும் செலவோ
சேரும் நூலக அட்டைச் செலவோ
குறிப்பேட்டின் விலையோ
குத்திக் கிறுக்கும் கோல் மாற்றிக்
கொள்கைக் கோலின்
முனை முறியாக் கடைச் செலவோ
காமச் செலவோ
குடும்பச் செலவோ
குழந்தைச் செலவோ
கோல்கை ஊன்றித் தளராமுன்
எதுவானாலும்
எழுத்துக்கும் பணத்துக்கும்
சம்பந்தம் இருக்கிறது தோழரே. 

***

No comments:

Post a Comment