Saturday, February 27, 2016

உலகியல்

முந்தைய வீடு தோட்ட வீடு
முன்கட்டில் மல்லிகை மற்றும்
செம்பூக்கள் குலுங்கும்
தெருவை ஒட்டி வளர்ந்து கவிந்து
எம்பும் ஆடு மாடு
தவ்வும் அணில்
தொட்டுத் தொட்டுப் போகும்
பட்டாம்பூச்சி இவற்றோடு
உறவாடி நிற்கும் செடிகள்
ஒரு பக்கம் எலுமிச்சை
கலக்கிய பசும் நிறம் கொண்டு
தன்னை இல்செறிக்கும் முள்ளில்
கைக்கிளை காட்டி இருக்கும்
அந்திக்கு முன்
வெந்தய வெய்யில்
கிடைசாய்ந்த கிரண கிருமி ஓட்டம்
முடையாத தென்னை
முதுகிழவியின் பேச்சொலிக்கும்
காம்பௌண்ட் சுவரொற்றித் தலை
மயிர் ஆண்டினாவின் நகர்வாய்
ஒற்றைக் கை ஒருக்களித்து
விருட்டென உயர்ந்து
ஒரு மலர் பறித்து ஓடும்
அடுத்த கைத் தவணைக்கு
மெல்லச் சென்றங்கு நின்றால்
தார்மிகக் கோபத்துடன் ஓருருவம்
தான் தெருவில்தான் நிற்பதாய்க்
கேளாத நியாயம் துலக்கும்
புன்சிரித்தால் பிடரி குமுறும் கோபம்
ஊமை முறைப்பாய்த் தள்ளிச் சென்று
ஆமை வேகமாய் நகர்வது போலும்
குற்றம் பார்க்கில்..எனும் குதப்பு மொழியொன்று
நினைவில் எழுந்து விரசம் பிதிரும்
’தட்’டெனும் ஒலிகேட்டு
விரைந்து போய்ப் பார்த்தால்
உள்ளே குதித்து ஒருபழம் கவர்ந்து
மெள்ளச் சருக்கி வெளியேறும்
கள்ளம் கடைவாய்க் கோணித்
தன்பொருள் உள்ளே விழுந்ததாய்
ஒப்பனை நிரூபணம் காட்டும்
பார்க்காத பொழுதில்
கதவம் மெல்ல விலக்கி
அதர்வினாச் சென்று அலையும் கைகள்
பறித்துப் பையில் இட்ட மலர்கள்
பின்வந்து நிற்கும் நம் உருவம் உறைக்கக்
’கடவுளுக்கு’ ‘உங்காத்துக்குத்தான் புண்ணியம்’
நாம் கேளாத ஆசிகளைப் பொழியும்;
கடுகடுத்தால் மொணமொணக்கும்
கண்டித்தால் வெறுப்புமிழ்ந்து செல்லும்
பழகிப் போன மரமும் செடியும் மலர்களும்
ஏன் பறவை இனங்களும் கூட
உலகியல் உணர்த்திச் சிரிக்கும்
விடு தொலையட்டும் விடு தொலையட்டும்
என்று அணிலும் அலுத்துக் கொள்ளும்
தூங்கி வழியும் வானம். 

*

No comments:

Post a Comment