இருளகற்றி இவ்வுலகில்
விரியுமொளி எதுவேயோ?
பருதியொளி விடியலிலே
புலர்ந்தெழுந்த அதுவேயோ?
புலர்ந்தெழுந்த ஆதவனார்
அந்தியிலே சாயுங்கால்
தளர்ந்திருந்த இருளெழுந்து
தரணியைத்தான் கவிழாதோ?
தரணியிலே ஒருபாதி
இருள்மூடிக் கிடக்குங்கால்
உருவெழுந்த சுடரொளியில்
மறுபாதி இயங்காதோ?
உலகெல்லாம் மூடுமிருள்
ஒன்றன்றோ இரண்டாமோ?
அலகில்சீர் ஒளியாலே
அகன்ற இருள் ஏதேயோ?
அகன்ற இருள் போனாலும்
அடுத்துத்தான் வாராதோ?
புகன்ற அறம் ஒன்றாலும்
போன இருள் மாளாதோ?
உகந்து அவன் உரைத்தவைதாம்
உள்ளத்தில் ஒளிராதோ?
விகசிக்கும் உள்ளொளியில்
இருளுக்கும் இடமேதோ?
*
No comments:
Post a Comment