Friday, February 26, 2016

ஒரு பொங்கல்

பொங்குமுளப் பொன்னமைதிப்
பூத்துவரும் புதுவிண்ணாய்
நம்பிக்கை எழுந்திடவே
தும்பிக்கை தழைந்துவரும்
வம்பலரும் மொட்டிற்கு
வான்முத்தம் ஈந்துவரும்
அம்புவிக்கு அச்சாகி
ஆதவனும் எழுந்துவரும். 

ஆதவனும் எழுகையிலே
ஆதரவாய்த் தொடுகையிலே
போதருவீர் என்றந்தப்
போதமகள் பொன்வாக்கு
காதம் பலதாண்டிக்
கருத்தினிலே மோதிவரும்.
வேதம்விளை விதைநெல்லாய்
வேயர்கொழுந்து உரைக்கவரும் 

வேயர்கொழுந் துரைக்கையிலே
ஆயர்பாடி தோற்றிருக்கும்
மாயவனும் மாயத்தால்
மண்ணுலகின் சார்பிருக்கும்
ஆயகலை அத்தனையும்
ஆன்மகலை கொண்டிருக்கும்
போயபிழை அத்தனையும்
புகுராமல் போயிருக்கும் 

புகுராமல் போனதனால்
பொன்வளமே பூத்திருக்கும்
வெகுவாக வான்சிறப்பும் 
வாய்மையும் மிகுந்திருக்கும்
நகுதக்கப் பேறுகளாய்
நான்முகனார் உலகிருக்கும்
புகப்பெற்ற பெருமிதத்தால்
பொன்னூழி பூத்திருக்கும் 

பொன்னூழி பூக்கையிலே
பூதலமே நிறைந்திருக்கும்
தன்னாமம் கெட்டதனால்
தலைவன்பால் சேர்ந்திருக்கும்
தன்னாமம் உரைத்தவர்க்கோ
தன்னையே தருபவர்க்கு
மன்னடிமை பூண்டதனால்
மகிதலமும் சிறந்திருக்கும். 

மகிதலமே சிறந்ததனால்
மேல்வானம் திறந்திருக்கும்
அகிக்குலங்கள் அழிந்ததனால்
அசுரகுணம் ஓய்ந்திருக்கும்
நெகிழ்ந்தவுளம் சென்றிருக்கும்
நாரணன்பால் மன்றிருக்கும்
இகழ்ந்துநமை வென்றிருக்கும்
இளிவரவும் போயிருக்கும். 

இளிவரவே போனதனால்
இளைத்தநெஞ்சு குதுகலிக்கும்
அளிமிகுந்த அருளாளர்
களிக்கவுல காண்டிருக்கும்
தெளிந்துவரும் தேன்மதியில்
தெய்வவுரு தோன்றிவரும்
எளிமைக்கே என்னாளும்
நம்முயிராள் பட்டிருக்கும். 

நம்முயிராள் பட்டதனால்
நாரணனார் உலகாளும்
தம்முயிர்க்கே உள்ளுயிராய்த்
திருமாலும் நின்றதனால்
செம்மைநெறி திறம்பாதச்
சான்றோர்கள் சிறந்ததனால்
மும்மைசால் உலகெங்கும்
முத்திநெறி விளைந்திருக்கும் 

முத்திநெறி விளைந்ததனால்
மூளும்வினை ஓய்ந்திருக்கும்
பத்திநெறிப் பித்தேறிப்
பகவர்குழாம் பொலிந்திருக்கும்
எத்திக்கும் எம்பாவாய்ப்
பரவிவரப் புலர்ந்திருக்கும்
தித்திக்கும் கதிர்நாடித்
திரண்டுவரும் புள்ளினமும் 

திரண்டுவரும் புள்ளினத்தில்
திருமாலும் ஏறிவரும்
திரைக்கடலைக் கடந்துவரும்
தினகரனாய் நடந்துவரும்
தரைமீது திவமாக்கித்
தன்னடியால் அளந்துகொளும்
திருவிக்கிர மன்சொத்தாய்த்
தரணியிதும் ஆகிவிடும் 

தரணியிதும் ஆயிடுங்கால்
தடையெதுதான் எஞ்சிநிற்கும்
முரணவிய முளைத்தநலம்
இளஞ்சீயம் எனப்புலரும்
பரிதிவரும் திசைசிவக்கப்
புவிமலரும் இசைமணக்கத்
தெரியவரும் பொழுதினிலே
பொங்கட்டும் பொங்கல். 

***

No comments:

Post a Comment