Friday, February 26, 2016

காலத்தின் ஓட்டம்

காலத்தின் ஓட்டம்
அதில் கருத்தின் தேக்கம்.
நிகழ்வுகள் திரும்பும்
சுற்றின் நினைவுகள்
வினாடியாய், மணித்துளி,
நாழிகை, முகூர்த்தம், என்று
படிக்கட்டாய் ஆண்டாகிப்
புறப்பட்ட கணத்திற்கே
வந்து சேரும் வாலாயம்.
போன ஆண்டு அடைகாத்துப்
பூரித்த குஞ்சாகிப்
புத்தாண்டு சிறைவிரிக்கும்.
புறப்பட்ட பார்ப்பில்
பிறப்பித்த தாய் ஆண்டு
சங்கமித்தும் இருக்கும்.
இல்லை காலம் எதுவும் நகர்வதில்லை.
நாம்தான் உருண்டு
நிகழ்வுகளோடு பயின்று
நாழிகேட்டான் வாசலில் போய் நிற்கிறோம்.
துய்த்த கணங்களும், தொலைத்த காலங்களும்
உய்வகை எண்ணி நெட்டுயிர்த்த நேரங்களும்
சையோகித்துக் கடந்த காலத்தின்
சயனத்தில் மஞ்சம் விட்டெழுந்து
எதிர்காலத்தின் முற்றத்திரு வாயில்
வந்து நிற்கும் நம் உயிருணர்வு.
காலமற்ற கனமாகி நின்ற சைதன்யம்
கோலம் பல்கி மனத்தடப் பன்மையில்
தன்னுடன் தான் இணங்கியும் பிணங்கியும்
தன்னோடு தன் பன்மைகள்
தன்னில் வேறாம் என
வரல் ஆற்றின் மதகுகள் எங்கும் மோதும்.
வண்ணத் தூரிகையாய் மாற்றம்
வரைந்து கலைக்கும் ஓவியச் சுழலாகி
விரையும் காலம்;
ஒரே ஆண்டைத்தான்
உருட்டி உருட்டிப் பெயர் தீட்டுகிறோம்.
ஒற்றைக் கன்னியின் ஓயா அழகு;
கொற்றவைச் சிரிப்பில் குவலயம் பூக்க
பெற்றவள் உண்டு மீந்தது பெருக்க
நற்றவம் பலித்த நவையறு களியில்
கற்றைச் சிவனார் கண்புலர் காட்சிச்
சிற்றம்பலமாய்ச் சிவணிய வானிடைக்
காலம் உதிக்கும் கணக்கொழுவாகிக்
கதுவி யெழுந்திடும் புத்தாண்டொன்று.
பிரமன் என்னும் உவாத்திதன் நாவில்
உலவிடும் வாணி நிமிட்டிய வீடு
உருக்கரந் தொளித்த உலகை மீட்டு
உத்தமன் அளந்த ஓரடித் தொடக்கம்.
நம்மை நாமே சுற்றி நமக்கே ஈந்த
ஞானக்கனியின் விதைமொட்டரும்பு. 

***

No comments:

Post a Comment