Saturday, February 27, 2016

எப்பொழுதும் போல் புத்தாண்டு

எப்பொழுதும் போல இந்த ஆண்டும்
என்னைக் கடித்துக் குதறிக்
கொஞ்சம் விட்டு வைத்து விளையாடி
நான் எதிர்த்து முரண்டு பிடித்துச்
சீறுவதையும்,
சிணுங்குவதையும்,
சில நேரம் செயித்தது போல் எண்ணிக்
கலகலத்துப் போவதையும்
எந்தப் பட வில்லனிலும் விஞ்சி
வினோத பொறுமை கூட்டிச் சகித்துப்
பின் வட்டிக்கு முதல் வட்டிக்
கறாராய்க் காட்டிய
பொறுமைக்குக் கட்டணமாய்
வாட்டி வதக்கி மேலுக்குச் சிறிது
இன்பம் போல் நறுமணம் தூவி
எடுத்து
அடுத்த ஆண்டு என்னும்
தட்டில் இடும் தருணத்தில்
எழுத்தென்னும் உயிர் மூச்சில்
இழுத்துவிடும் பெருமூச்சில்
இஃதொன்று.
இன்பப் புத்தாண்டு என்றிடுவேன்
போகின்ற மொத்த ஆண்டு எனை நகைக்கும்.
போகின்ற ஆண்டு பெரிது என்பேன்.
வேகின்ற வேட்கை என அது நகைக்கும்.
ஆகின்ற வேலையைப் பார்ப்போம் என
ஏகும் யதார்த்தவாதி அல்லவே யான்.
ஊகம் உள்ளுயிரின் தாகம்
உன்மத்த வேகம் உணர்வின் பரிபாகம்
சென்மித்த வினைப்பாகம்
சீரணிக்கும் நாள்வரையில்
பேரணியாய்ப் பன்னாகச் சீற்றமாய்ப்
பாய்சுருட்டும் பெருமான்கள்
பொழுது போக்கும் ஊற்றமாய்
அழுதாலும் சிரித்தாலும்
போய்த் தொலையாப்
பச்சைப் பசும் ஊழாய்த்
தாயாகி முலைக் காம்பில்
விஷமூட்டும் தயாவாய்
நஞ்சிரித்து நஞ்சிரித்து
நையப் புடைத்தயரும்
நல்லதொரு விதியென்பார்
நாயகத்தில் ஆடுகின்ற அருஞ்சூதில்
போய்விழுந்ததொரு தாயன்
புனராட்டம் காயுருட்டிப்
புன்னகைக்கும் பகடைக்கு
இன்பப் புத்தாண்டு வருக என்பேன்
ஒருகை குறைவதனால்
உட்கார்ந்துதான் ஆடட்டுமே.
உள்ளூறும் வெற்று இலைக்குச்
சுண்ணம் தடவி புத்தன்
உணர்வின் இதழ் குவித்த
குமிணகைதான் பூக்கட்டுமே
போகின்ற வால்கவ்விப்
போதருமோர் வாய்புகுமுன். 

***

No comments:

Post a Comment