நாம் ஏன் பொய் சொல்லுகிறோம்?
நல்லதை நாம் விரும்புவதில்லை.
கெட்டதை நாம் ரகசியக் காதல்
செய்யாமல் இருப்பதில்லை.
ஆனால் நன்மையின் கட்சி என்று கூசாமல்...
தீமையோடு போய்ச் சேர்ந்து
நன்மையின் கௌரதையை இழக்க விரும்பாமல்
நன்மை என்று முழு மனதாகித்
தீமையின் காந்தல் ருசியை விட முடியாமல்
இது என்ன சர்வ ஜன ஒப்பந்தப் பொய்?
நன்மையை விரும்புபவர் என்றால்
நன்மை அல்லலுறும்போது
நாம் ஏன் பதுங்கிக்கொண்டு
கள்ளப் பார்வை பார்க்கிறோம்?
தீமை கையோங்க நாம் ஏன்
நம்மாள் வெற்றி பெற்றது போலக்
களிக்கும் கணப்பொழுது தடயத்தை
அவசரவசரமாக அழிக்கின்றோம்
முகம் புடைக்கத் தார்மிகக் கோபமாய் ஆக்கி?
படைத்தவனுக்கு நாம் சொல்லும்
பொய்யா இது?
அன்றேல்
படைத்தவன் நமக்குச் சொல்லும்
மெய்யா இது?
எப்படியோ,
உள்ளம் என்று சொல்லிக்
கள்ளம் என்பதை வைத்தது
யாருடைய பொய்?
***
No comments:
Post a Comment