Friday, February 26, 2016

ஆன்மிகமும் தரையும்

ஆன்மிகம் ஆன்மிகம் என்றாலும்
தரையில்தான் நீச்சல் அடித்துக்கொண்டிருக்கிறோம்.
புழுதி கிளம்பி, நுரை தள்ளி
ஆறுக்கு ஆறு
பள்ளம் தோண்டியதுதான் மிச்சம்.
கழுதைப் பொதியாய்க் கருத்துகளும்
கழுத்துப் பொதியாய்ப் பேச்சுகளும்
கிடைத்த காதுகளிலும்
கிட்டிய கண்களிலும்
கலப்பை இல்லாமல்
உழுததுதான் மிச்சம்.
விளைச்சல் பேய்த்தேர்களில்
மூட்டை மூட்டையாய்
ஏற்றுமதியாகிறது
எங்கென்று தெரியாமல்
எப்படி என்று புரியாமல்
ஏதோ கொள்முதல்;
இவ்வுலகை விண்ணாக்க
முடிகிறதோ இல்லையோ
விண்ணை மண்ணாக்கி
விளைநிலமும் ஆக்கிவிட்டோம்.
வானில் விளைந்து
கடிதில் இழிந்து
தரையில் கிளைபரப்பிக்
கனிகுலுங்கப் பூத்துவிட்டால்
அப்புறம் அஸ்வத்தம்;
எங்கோ சாவித் துளை இருக்கிறது;
முதலில் சாவியைத்தான் தேட வேண்டும். 

***

No comments:

Post a Comment