Friday, February 26, 2016

ஒளிவு

ஏய்! யாரது? யாரது?
என்னுள்ளே ஒளிவது?
ஊரெல்லாம் ஓடி
உழைத்துவந்த களைப்பென்றாலும்
ஒளிந்துகொள்ள என்னெஞ்சம்தான்
கிட்டியதோ கள்ளப்பொய் இருளுக்கு? 

இன்றுமட்டும் என்னை விட்டுவிடு.
இருநிலம் எங்கும் தேடினாலும்
மருள் என்ற மஞ்சமிட்ட
ஒரு குகை உன்னெஞ்சம் விட்டால்
கிடைப்பரிது; பரவாயில்லை;
எத்தனையோ நாட்கள் நீ
என் பவனக் கொலுவிருப்பில்
உன்னிஷ்டப்படியெல்லாம் திரிந்தாயே!
நான் எதுவும் சொன்னதுண்டா? 

உனை அண்டிவந்த நாட்கள்
ஓர் இருட்காலம்;
எனை மண்டிச் சேர்ந்த பொய்கள்
ஏராளம்;
இன்றுதான் காலக் கசடுகளைக்
கழுவிச் சுரண்டிக் காயவிட்டுத்
தூயதாய் ஆக்கி வைத்தேன்;
தொலைவில் போ!
பேயானாலும் பிரிவு கொடிது; 

தாய்போல் உன்னைத்
தாங்கியதெல்லாம் மறந்தாயா?
ஏங்கியதெல்லாம் ஏற்று நீ மகிழ
என் பெயர் சொல்வாய்
என்றிருந்தேன் யான்
நோவாய் உனக்கு ஆனதும் என்? 

இருளின் மடிசுகம் ஒரு பொய் நிகழ்வு;
அருளின் விடியலில் அது பொடியும்;
அதுவரை மயக்கில்
அநுபவம் கோடி தந்ததாய்ப்
பொய்யாய்க் கணக்கெழுதும்;
போகட்டும் விடு என்று
பொல்லாங்கு அஞ்சுகின்ற
மெல்லியவென் உள்ளம் மலைக்கும்;
புல்லிய காரணங்கள் புனிதம் பூசும்;
வில்லுதைத்த சரங்களெனெ
விழைவு முகம் பல தைக்கும்;
அடிபட்ட மானாய் அகம் குழையும்;
ஆர்ப்பரிக்கும் இரவின் அதிர்வுகளில்
அந்தரங்கம் கலகலத்துப் போகும்;
ஆன்மப் பாழாகி
ஊன்பொதியில் உயிர் தேம்பும்;
உருள் வையக் கண்ணாகி
ஒற்றைத்தேர் உருட்டிவரும்
ஒரு வெய்யோன்
பையத் தன் கதிர்க்கரத்தால்
தைவரும் இன்புலரிக்கே
மயலாகி நெஞ்சம்
வடக்கிருக்கும் இந்நாளில்
இடக்காகப் பேசி
என்னதான் நீ புகன்றாலும்
இருளுக்கிங் கில்லை யிடம். 

***

No comments:

Post a Comment