Saturday, February 27, 2016

விதி

யாரும் வேண்டாம் என்று சொன்னாலும்
ஒண்ட வந்த விதி நகர்வதாக இல்லை.
பாரின் மூலத்தில் பாதி மிருகமாய்
இருந்த பண்டைய நடப்பு
இன்றும் அன்றாடச் செய்தியாகி
இனி எங்கு போகிறது என்று
மனித குலத்தின் கேள்வியாகிப்
பின் துயில்கிறது.
வந்து வந்து இறங்கத் துடிக்கும் விண்
காலில் ஆணி என்பதாலோ
தரை வழுக்கும் என்பதாலோ
நீட்டிய பாதமும் மடக்கிய முழந்தாளுமாய்
எட்டி எட்டிப் போகிறது;
உள்ளிருந்து அவ்வப்பொழுது
வெளிவர யோசிக்கும் வான்குலம்
நம்பிக்கை என்னும் சோகையில் சாய்ந்து
வித்யாசம் தெரியாமல் நிற்கிறது;
ஐம்புல நுகர்வில் அபிஷேகம் ஆகும்
அகங்காரம் வீதியுலா கண்டருளும்
மகத்துவத்தை நினைவு உலா பாடும்
விடம்பனம் வீதி நாய் குரைப்பைப் போன்று
இன்னும் விட்டபாடில்லை;
சந்திரன் உருகி நிலவுச் சொட்டாய்
விழுந்த சிரிப்பின் கணங்கள்
அழுகையின் கொடுங்கையாகி
விரசமாய்ச் சிரிக்கின்றன நிலவொளியில்;
எழுந்துவந்த உருவம்
அருவமாகிப் போய் முடங்கும்
அவகாச நிழலில் அலைபாய்கிறது
என்றோ கட்டி நைந்து நாராகிப் போன
புனர்ஜன்ம எதிர்பார்ப்பு;
வயல்வரப்பெங்கும் தலை நீவும் காற்று
அயலாகிப் போன மன வெளியில் புகைகிறது;
செயல் மறந்த சாட்சியமாய்ச் சிரிக்கிறது சிலை;
சேற்றில் அளைந்த எருமை
பெருந்தன்மையாய் வீதிவழி போகிறது;
வளைந்த கொம்பில் அமர்ந்து
அதை ஓட்டிச் செல்கிறது சிறு புள்;
ஆலய மணி மனிதனிடம் நம்பிக்கை இழந்து
நாத்திகமாய் ஒலிக்கிறது நடுநா இன்றி;
வாயில் காப்போரின் வீர சாகசக் கதைகள்
வெத்திலைக் குதப்பலாகி
வெண்சுவரில் வரவு வைக்கப் படுகின்றன;
நாயகர்களின் மெய்க்கீர்த்திகளை
அழிக்க மனமின்றித்தான்
முகர்ந்து தள்ளிப் பதிவிடுகிறது புள்ளிநாய்
நேற்றிரவு விரட்டிய நாய்க்குழு தீர்மானத்தை;
கடவுளும் மனிதனும் அடங்கிப்
பிரேதமும் உயிரும் பிணைந்த ஒரு நடமாட்டம்
லாப மூர்த்தியின் கொலுவில் நடனம் பயிலும்.


***

No comments:

Post a Comment