புகையும் நாற்றம் தெரியவில்லை?
ஆதிகாலத் தசையுலகில் தீப்பிடித்துப்
பக்குவப் பட்டது உள்ளம்.
உணர்ச்சிகளின் வெப்பத்தில்
நரம்புகள் கனன்று
நெஞ்சக் கொழுந்து ஆடியது.
ஏற்றி வைத்த அகலில்
விலங்கிருள் விலகியது.
எங்கோ எங்கோ தீப்பிடித்திருக்கிறது
சுடரும் சத்தம் கேட்கவில்லை.?
மனம் கொதித்து அனுபவப் பாடங்கள்
ஆன பக்குவத்தில் அரை மனிதம்
குறை விலங்கில் ஏறி அமர்ந்தது.
அமர்ந்த மனிதக் கரத்தினில்
எழுந்த தீயின் ஒளியிலும், தணப்பிலும்
விலங்கிருள் விலக விரைந்தது வாகனம்.
சுமந்தது மிருகமா
அன்றேல் அமர்ந்தது மிருகமா
என்று பல நேரம் புரியவில்லை யெனினும்
எங்கோ எங்கோ தீப்பிடித்திருக்கிறது
வெக்கை உணர்வில் உறைக்கவில்லை?
உணர்வின் கதவு திறந்து
உள்மௌனம் ஆனது மனிதம்
தணக்கும் தீயில் தனையீந்து
வேள்வி புரிந்தது விலங்கு
குணங்கள் மலர்ந்து ஏந்திய தழலில்
தெய்வம் பிறந்து புசித்த மனிதம்
செய்தவம் பலிக்கப் புலர்ந்தது புனிதம்
உய்வகை கண்ட உள்ளம்
உறைந்தது தெய்வப்
பதமலர் பனித்திடும் தேனாய்.
எங்கோ எங்கோ தீப்பிடித்திருக்கிறது
மனித நடையெங்கும் தெய்வ மணம் கமழ
புனித போதங்கள் புலர் விடியல் பாட
துனியழலில் தூசாய்த் தீயவை இரிய
மனித வடிவெங்கும் மகத்துவத் தீயில்
ஆகுதியதாகி அமரமெழும் வேளை....
எங்கோ எங்கோ தீப்பிடித்திருக்கிறது ...
***
No comments:
Post a Comment