Friday, February 26, 2016

அந்தி மாலை

அந்தி மாலை
புந்தி மயங்கும் வேளை
மேலை மஞ்சம் அயர்ந்த பரிதி
இன்னும் தன் கதிர்ச்சலாகை களையவில்லை.
உச்சிவானம் எட்டிப்பார்த்து
நாணத்தில் கன்னம் சிவக்கிறது.
எங்கும் உறைகுத்திய நீல வானம்
நீள்பயணம் போகும் புட்குலக் குழாம்
குறுவாள் ஒத்த தம் சிறகுகள் கொண்டு
விடுத்த திரை கிழித்துக் காணும்
ரகசியம் தமக்குள்
மாறி மாறிப் பரிமாறிச்செல்லும்.
ஒட்டுக் கேட்க விழைவன போன்று
ஓடும் நீர்த்தடம் முகமொத்தும் மீன்கள்.
எங்கோ பழங்காலத்தின் புதுக்குரலாய்
இரைந்து போகும் இரயில்கள்.
குலைக்கத் தொடங்கித் தொலைவில்
நிறுத்த மறந்துபோன நாய் ஒன்றிற்கு
அனுதாபமாய் உறுமும் இங்கொன்று.
மனமும் புறமாகித் திரிய மகிழும்
இயற்கையின் சொப்பனமாய்ச்
சந்தியா காலம். 

***

No comments:

Post a Comment