Saturday, February 27, 2016

தில்லைத் திகழ்கூத்தா

தில்லைத் திகழ்கூத்தா தாண்டவத்தி லாடுசடை
தொல்லை வினைபாற்றத் தூக்கியகால் நல்லரணோ
பொல்லா இருளடக்கிப் போதப் புகலளித்துக்
கல்லா எனைக்காவாக் கால் 

கால்நொந்தக் கால்வருங் காலன் பயம்தீர
சேல்நொந்த கண்ணாள் சிவையருள -- பாலேய்ச்
சிவனார் அருட்கண்ணால் சிந்தனையில் நின்றே
பவனானால் என்னாம் பவம். 

பவங்கடக்கும் உத்திப் பரிவாள் வலமாய்ச்
சிவன்கிடக்கும் என்றே நினைவாய் -- அவமகற்றி
ஆன்றதன் கண்ணால் அனைத்தும் தனையொப்பப்
பூன்றமாய்க் காட்டுமே தான். 

தானாகி நின்றுலவும் சங்கமமாய்த் தாவரமாய்க்
கோனாகி நின்றும் குருவாகி வந்தானும்
மானா பிமானம் கடந்தான் மகேசன்தாள்
தேனாய்த் துளிர்க்கும் தவம். 

தவம்செய்துத் தம்முலகம் பெற்றாரே யன்றிச்
சிவம்பெற்றார் யாவரே எண்ணில் - அவச்சுட்டே
தாமொழித்துக் காட்டுவான் காண்பான் அவனென்ற
நேமத்தா ரிப்பவத் தில். 

***

No comments:

Post a Comment