Friday, February 26, 2016

உள்ளரற்றல்

உளறுகின்றேன்;
உள்ளத்தின் வேதனையில் ஒருவாறு
மரத்துப் போயிற்று நெஞ்சம்;
தள்ளத் தெரியாத தாயின் கைதேடித்
தள்ளாடி விழுந்ததென் வாழ்வு;
அகம் விட்டுப் பிரித்துவிட
அந்த யமன் வரும்வரையில்
நெட்டுயிர்க்கும் என் ஆவி;
யாருக்கும் தெரியாத மறைபொருளாய்ப்
பேருக்கு எனைச் சுமந்த உயிர்
வேரில் விரக்தி பிடித்து விரையத் துடிக்கும்.
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம்
சீறிச்சிவக்கும் என் ஜீவிதத்தில்;
யார் வந்தாலும் என்ன, போனாலும் என்ன
என்று அலட்சியமாய் விரையும் காலம்;
விட்டுப் பிரியாத பந்தமாய்
வினைசூழச் செல்லும் என் விதி;
தொட்டுப் பேசிப் பின் தொடராத சொந்தமாய்த்
தொலைத்துவிட்ட நட்புகள்
விட்டுச் சென்ற நகைப்புகள்
வியர்த்தமென ஆக்கும்;
தெப்ப மண்டபத்தில் குட்டிகளை ஈன்ற நாய்
இரை தேடப் போயிற்று
என்று நண்பன் உரைப்பச்
சென்று கொணர்ந்த குட்டிகளின் பிரிவு
அந்தப் பைரவத்தைப் படுத்திய பாடு
மீண்டும் கொண்டு விட்டாலும்
என்னை விடாமல் துரத்தும்;
ஆணி மாண்டவ்யனாய்க்
கூர்வேல் படுக்கையின் மேல்
என் பகற்கனவுகள் பழிக்கும்;
கண்ணன் குழலூதக் கன்று மடிமறக்கும்
ஆவினம் எனை வெறித்துச் செல்லும்;
மன்மதன் எரிந்தகதைக் கேட்டு
மாகாளிக் கோயில் பலியாடாய்
என் மனசாட்சிகள் அலறும்;
சாட்சியற்ற கூண்டில்
சந்நத்தமாகும் சத்தியங்கள்
தீர்ப்புகளைத் தாமே நிறைவேற்றிப் போகும்;
சரி என்றும் இல்லையென்றும்
புரியாத லயங்கரையில்
சரி பாதி வாழ்நாள்
மோதி மோதிக் கழியும்.
எனை நானே சகித்துக்கொள்ளச்
சங்கடப் படும்பொழுது
உன்னைக் குற்றம் சொல்லி என்ன பயன்?
அன்னை என்றாலும் அவளுக்கும் நெஞ்சுண்டே!
என்ன இருந்தாலும் நீ எந்தன் தாயன்றே?
சேற்றில் இருந்தாலும் நானும் உன் சேயன்றே?
ஏற்றிவிடு என்று உன்
அருள் நோக்கி அழுவதல்லால்
கூற்றுவர்க்கோ குடிக்குணவாய்க்
கொள்ளை போகும் என் வாழ்வு?
காற்றாகி நின்றென் மூச்சிழைத்தாய்;
ககன வெளியாகி நின்றென் வாழ்வமைத்தாய்;
தீயாகி நின்றென்
உயிர்ச்சூட்டில் ஊக்கவந்தாய்;
புனலாகி என் குருதியுள் புரிந்தாய்;
மண்ணாகி வந்தென் உடலோடுவந்து
மனத்துயர் மாற்றும் மருந்தானாய்;
எண்ணத் தொலையாத கவலைகள்
எனையுண்ண நாளும்
உனை எண்ணும் ஓர்வரம் போதும்
அது தனை வெல்லத் தந்திரம் ஆகும். 

***

No comments:

Post a Comment