நான் அவ்வளவு துடித்தபோது
நீ சொல்லியிருக்கலாம்,
நீதான் என்னைப் பற்றித்
தவறாகச் சொல்லி வைத்தாய் என்று.
ஏன் இந்தக் காரணமற்ற துன்பம் என்று
நான் புரியாமல் கவன்ற பொழுது
ஒரு வார்த்தை,
தவறுதலாக நடந்துவிட்டது என்று
பொய்யாகவேனும் சொல்லியிருக்கலாம்.
நான் என்ன பாபம் செய்தேன்
இப்படித் துயரம் அனுபவிக்க
என்று நான் குமைந்த போது
‘உன் பாபம் இல்லை;
என் சொல்லின் இடறல்’
என்று ஒரு கணம்,
கருணை கூட வேண்டாம்,
உரையாடல் நேர்த்தி ஆகவேனும்...
என் உள்ளத்தின் ரத்தம்
சொட்டச் சொட்ட
ஒத்தடம் இட்டு நான் ஓய
ஒத்திய அடைப்பை மீறி,
உணர்ச்சிக்குருதி பாய...
விடு, உன் குற்றம் இல்லை -
என்று ஒரு முனகல் ...
எவ்வளவோ இதமானதாக
இருந்திருக்கும்.
வேறு பேச்சு பேசுவோம்
என்று பேச்சை மாற்ற நீ
முயற்சி செய்திருந்தாலும்
உன் காக்காப்பொன் அக்கறை
அந்நேரக் கனிவாய்
என்னை ஆற்றியிருந்திருக்கும்.
இல்லை.. உன்னை இப்படி
ரணத் துடிப்பில் கண்டு
என் பழி முடிக்கத்தான் காத்திருந்தேன்
என்று வஞ்சம் பழுத்து
நீ வக்கரித்திருந்தாலும்
எனையறியாது என்றோ
எத்தனை முறையோ உனை
நோகடித்திருக்கக் கூடிய
சாத்தியங்களுக்கு இட்ட பலியாய்
இன்று லபித்த நேர்த்திக் கடனாய்
நோன்பு காத்து நிம்மதி என்பேன்.
ஆயினும்... ஆயினும்...
இறுதிவரை அமைதி காத்து,
என் இற்ற உயிரை அள்ளிக்கோத்து
முன்வழி விலக்கி முனகி நான்
மூச்சினைத் திரும்பப் பெற்று
மீண்ட இந்தப் பொழுதில்
நீ சொன்னதன் விளைவு
என்று நான் உணர வந்த தருணம்
‘சாரி’
என்ற ஒற்றைச் சொல்லில்
சிலுவை அறையும்
உன் இந்த அமைதி !
இறைவ,
இவர்கள்
என்ன செய்கிறோம்
என அறிந்தார்
இல்லை.
***
No comments:
Post a Comment