அழகு!
என்ன அது?
கண்ணினிப்பா?
காதில் மதுவா?
முகர் மயலா?
நாவீன் தேனா?
தொட்டெறியும்
இன்பச் சூறையா?
மிருதுவா?
வளைவா?
நெளிவா?
சுழிப்பா?
செழிப்பா?
குழிப்பா?
விழிப்பா வையம்
பிரதியா?
ரதிப்பார் வைக்குள்
குனியும் வில்லா?
விரையும் சரமா?
சரக்கூடாகிச்
சுடரும் கதிரா?
கதிரும் குளிரும்
பனிவெப் பியலா?
இயலாய் அயலார்
மயலுண் பதுவா?
கயலாய்க் கடைவிழித்
தூண்டுஇல் புதுமையா?
மையாய் இட்டுளம்
நையும் கொடுமையா?
புலரும் கதிரும்
படியும் நிலவும்
அலரும் பூவின்
தலைநுண் முகையும்
விம்மிடும் மலையும்
விழுந்திடு சரிவும்
விரைந்திடு பள்ளத்
தாக்குறு புதரும்
தேக்குறு மேடும்
தழைத்திடு தடநீர்
பாய்வழித் தடமும்
இயற்கையின் கொசுவம்
அவிழ்ந்திடு கடலும்
அலைக்கரம் தழுவப்
படிந்திடு கரையும்
சிறகுசிலிர்க்கச்
சிவணிய விண்ணும்
சுயத்தில் கரைந்த
பயனாய்ச் சுகமும்
இயற்கை எங்கும்
பொங்கும் வளமும்
இயலும் உன்பால்
எனவே நினைத்தால்
நினைவாய் நிலைத்த
ஈரம்புலராக் கணத்தில்
இயற்கையின்
ரசாயன உயிர்ச்
சமன்பாட்டில்
கூட்டியும் கழித்தும்
பெருக்கியும் வகுத்தும்
மிச்சமும், ஈவும்
சொச்சமுமாக்கிச்
சொகுசாய் இயற்கை
சொக்குப் புன்னகை
பூக்கும் மணமா?
அழகு!
அழகா?
அளவா?
மயலில் கருத்து
துயிலக் களவா?
அணுக்கள் முயங்க
அவைமேல் படிந்த
உள்ளப் பாசி
உமிழும் குமிழோ?
அமிழும் உயிரின்
முடநம் பிக்கையோ?
எதுவானால் என்?
மெதுவாகவே வா!
இறப்பே!
நீயே அழகின்
தூய வடிவோ?
அழகென்ற ஒன்று
இலையென்ற மர்மம்
கலையவிழ வா!
அலையெறிய நாடி
அநவரதம் கூடித்
தலைநாளில்
அருளோடு வா!
***
No comments:
Post a Comment