ஒன்று போலத்தான் என்பதில்லை;
என்றோ திருநறையூர் போய்விட்டுத்
திரும்புங்கால் இரவு
நெடுஞ்சாலை நிலவு
தனியே ஆழ்ந்து அர்த்தமானதாய்
இன்றும் நினைவு.
என்ன அர்த்தம் என்று தெளிய
அந்த நிலவு போதவில்லை.
என்றேனும் ஒரு நிலவு
விளக்கத்துடன் வரலாம்;
அன்றேல் விளங்கியும் விளங்காதும்
விரியா நிலவம் நிலைத்தும் விடலாம்.
புரியாமை இயற்கையில்
ஒறுக்கப்படுவதில்லை.
புரிந்ததனால் விளக்கம்
சுருங்கிப் போவதும் உண்டு
பகல் நேர நிலவின் ஒளி
விளக்கமா? மறைதலா?
ஆயினும் நிலவுகள்
ஒன்று போல் இருப்பதில்லை;
ஒவ்வொன்றும் என்ன சொல்கிறது
என்பது ஒருபுறம் இருக்கட்டும்;
அந்த ஒரு நாள் இரவு
திருநறையூர் நெடுஞ்சாலை நிலவு!
ஏதோ சொல்ல நினைத்தது;
பின் ஏன் தயக்கம்?
அது விரட்டிய இருளைக் கேட்கிறேன்
இன்றும் அது சொல்ல மறுக்கிறது,
தன்னைப் பற்றிய ரகசியங்களைக்
காலங் காலமாய் நிலவு
சொல்லிவருகிறது என்னும் போதும்;
ஒரு வேளை அந்த ஒற்றைச்
சோனி சிகப்பு நாய்
அதற்குத் தெரிந்திருக்குமோ?
வானுக்கும், எனக்கும்,
தூரத்துத் திசைக்கும்
மோப்பம் பிடித்து ஊளையிட்டதும்,
தெரிந்துதான் இருக்கும் என்று
நான் நம்பத் தொடங்கியதும்,
மைல்கல்லில் கால்தூக்கிச்
சிறுநீர் கழித்துச் சென்றுவிட்டது.
ஒரு நிலவு போல் இல்லை ஒரு நிலவு.
***
No comments:
Post a Comment