பாலை வனத்தில்
நா வறண்டு, கண் சுழன்று
உயிர்ச் சத்தெல்லாம் இழந்து
ஒரு புதைகுழியில் விழுந்து கிடந்த போது
தலைக்கு மேல் சுற்றிய
அந்தப் பிணந்தின்னிக் கழுகு பேசியதோ
என்னவோ தெரியவில்லை
அந்தக் குற்றுயிரும் குறையுயிருமாய்ச்
சுருண்ட நிலையில்
விடாமல் சன்னமாய் ஒரு குரல்
என்னைச் சாடியது:
‘பார்! பிழைக்கக் கற்றுக்கொள்.
உயிர் வற்றி மயக்கமுற்றுத்
தலைசுற்றித் துவண்ட போது
தாங்கிப் பொறுமை காத்து
உடன் நிற்காமல்
போகும் பொழுது
மண்வாரித் தூற்றிச் செல்வதுதான்
தோழமை என்று
காட்டிப் போகும் செயலைப்
பார்த்தாவது பிழைக்கக் கற்றுக்கொள்;
எத்தனை முறை அவர் துவண்ட போது
நீ தாங்கி நின்றாய்,
கீறலையும், பிறாண்டலையும்
சகித்து நின்றாய்;
பாரத்தைச் சுமந்து நின்றாய்;
ஆனால் உனக்கு ஒன்று என்றால்
விட்டோடும் இந்தச் செயல்
இனியாவது உன்னைத் திருத்தட்டும்;
உலகில் வாழும் முறை இதுதானப்பா!’
அலகு தூக்கியபடிக் கீழ் நோக்கி முறைக்கும்
அந்தக் கழுகா பேசியது தெரியவில்லை;
தட்டுத் தடுமாறி, உயிரைப் பிடித்துக்கொண்டு,
போராடிப் புதைகுழியிலிருந்து
ஒருவழியாய் வெளியேறிப் பார்க்கும் பொழுது,
அலுத்துக்கொண்டு போனது கழுகு:
‘பாவி! இந்த முறையும் தப்பிச்சுட்டானா...
நம் உணவு பாழ்ழ்ழ்ழ்ழ்ழ்..’
இதை வைத்துக்கொண்டு எப்படி
முடிவு செய்வது அதையும்
கழுகுதான் பேசியது என்று?
பின்னர் அந்தக் குரல் எங்கிருந்து?
பாலை வனத்தில் நினைவு தப்பி,
உயிர் வற்றிச் சுருண்ட போது
உத்தண்டமாய் எழுந்த அந்தக் குரல்....
சரி இனி என் வழிப்பயணம்
நான் தொடர்ந்திட வேண்டும்;
பாலை கடக்கும் வரை
விழுவதும், எழுவதும்,
துவள்வதும், தொய்வதும்,
துவண்டபின் அயர்வதும்,
அயிர்த்துப்பின் எழுவதும்
உண்டாலம்ம இம்மானிட வாழ்க்கை!
***
No comments:
Post a Comment