பல இடங்களுக்குப் போவது,
காடுகள், நதிகள், மலைகள்,
ஊர்களில் எல்லாம் சென்று
இயற்கையின் அழகில் திளைக்கலாம்தான்.
ஆனால் எனக்கோ அவை
பெரிதும் மயக்குவதில்லை.
வேறு வேறு தேசங்கள்
வேறு வேறு சூழ்நிலை
வானம் மண் காற்று,
மழை, இயற்கை சக்திகள்
கூடித்தரும் கொலுவில்
சுண்டல் பெற்றுவர
என் பேப்பர் பைகள்
துடிப்பதில்லை.
சரிதான்.
அகன்ற வீதிகள்
நெடிய அடுக்குகள்
அணையா விளக்குகளின் வரிசை
அருவிபோல் கொட்டும் குழாய்நீர்
பளிங்குச் சாலை
அவசரக் கோலமாய்ப் புறப்பட்டு
நிதானமாய் நடக்கும் மனிதர்கள்;
மகிழ்ச்சியில் திளைத்துத்
திரியும் ஜனத்திரள்;
வியாபாரம், கடைவீதி, தேரடி,
பூக்கடை, காய்கறிச் சந்தை
பார்க்கும் இடமெல்லாம்
புகைபற்ற வைக்கும் மூலைக்கடைகள்.
பழைய நூல் விற்கும் கிடங்குகள்;
புதுநூல் சிறப்புத்
தள்ளுபடி தருமிடங்கள்;
பட்டுப் புடவையிலும்
மீறித்தெரியும்
முலைக்காம்பின் முனைபழிக்கும்
கூர்விழி மாதரின் கண்முறுவல்;
எண்ணுக்கு அகப்படா
இலக்கங்கள் எல்லாம்
கணினியில் இயக்கும்
கைவிரல் மாயங்கள்;
கண்சிமிட்டும் திரைக் கோவைகள்;
கால்வைத்தேறப் பணிந்திடும்
சாமந்த ஆனைப் பேருந்துகள்;
இன்னும் பற்பல முடியாப் புதுமையாய்
இணைந்த வாழ்க்கை இதுதான்
எனக்கு ரசிக்கிறது;
நான் கிராமத்து ஓவியமன்று;
நகரமலர்.
உண்மைதான்.
***
No comments:
Post a Comment