Friday, February 26, 2016

உன்னுருவம்

உன்னுருவைத் தொடவேண்டும்.
உச்சிமண்டை உன்மத்தம்
உள்ளத்தைக் காய்கிறது.
அச்சடித்த படங்களிலும்
அலங்கரித்த சிலைகளிலும்
தொட்டுப் பார்த்துத்
துவள்கின்றது நெஞ்சம்.
தொலைவில் எங்கோ இருக்கின்றாய்
எங்கென்று அறியேன் நான்;
இங்கெங்கோ உன் வாச மோப்பத்தில்
வாழ்க்கை குழைகிறது;
வந்துவிடு என்று வாசக் கால்வரை
இதயம் சென்று சென்று அடிக்கிறது;
புதையல் கண்ட கிராமத்தானாய்
விழி பிதுங்கி நிற்கின்றன கண்கள்;
பழிச்சொல்லும் பைத்தியப் பட்டமும்
பெற்றதுதான் வாழ்ந்து பெற்ற பரிசு;
ஒரு வேளை வாழாமலேயே உற்ற தரிசு;
எங்குள்ளாய் என்று வினவும் அறிவு;
எங்கெங்கோ முகவரிகள்
நூல்கள் தரும் தரவு;
அரவணைத்த பொய்த்துயிலும்
ஆடரவ நாடகமும்
ஆட்டிவைத்த அகங்காரத்
தலைமாலை அணிந்தாட்டும் மாயமும்
ஒன்றும் அறியேன் யான்;
ஒன்றறிவேன் நான் பித்தன்;
வாழ்வறியாப் பொய்க்கே
விலைபோன வீணன்;
பக்தி என்ற சொல்லுக்கு
எதிர்ப்பதமாய் ஆனேன் நான்;
முக்தி என்ற அந்நிலைக்கு
முடமாகிப் போனேன் நான்;
எத்திக்கும் என் விழியால்
இறைத்து திகைப்பேன்யான்;
புத்தியிலே பேரரசாய்ப்
புனைந்துகொண்ட கற்பனைநான்;
பொன்றாமல் இருக்கின்றேன் ஆச்சரியம்;
மன்றினிலே நடமாடி
முக்கண்ணும் விழியாடி
நக்கபிரான் உற்று உற்றுப்
நெருப்பாகப் பார்த்தாலும்
எரியாத வினையாடி
என் வாழ்க்கை முடியும் ஒரு நாள்;
உன் வழக்கும் முடியும் அந்நாள்;
உணராத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள்
என்றலறி என் ஜீவன் ஓயுங்கால்
உயிருலர்ந்த வெற்றிடத்தில்
உன் நகையும் விரியும்;
அன்பின் வேதனையில்
ஆற்றாது அலையும் என் ஆவியும்
உன் புன்னகைக்குப் பொருளாகும்;
பொருந்தவிட்ட ஊழும்
பொல்லாத முப்பாழும்
கருந்தரையாய்க் காலம்
ககனவிருள் திரைபோடும்
இடைவேளை வரும்வரைக்கும்
இங்கிதங்கள் பல உரைக்கும்
இளிவரலாய் ஏகட்டும்;
இனிவருகின்ற நாளெல்லாம்
வேதனைக்கே விற்றவன்தன்
பித்தப் புலம்பல்கள் தொடரட்டும்;
பாசுரங்கள், பதிகங்கள்,
பரமசுக வேதங்கள்
பக்குவமாய் ஊட்டிவரும் பொன்செவிக்கே
நக்க பொருளாகி
என் நாவேர்ப்பும் தொடரட்டும்;
மிக்க விரசமென மாதேவன் கண்புதைத்து
யோகத்தில் அமரட்டும்;
தொக்க உயிர்க்குலங்கள்
தப்பித்தால் போதுமென
மாயோன் வயிற்றினிலே
மீட்டுவைத்துக் காக்கட்டும்;
தாயாய்த் தயாபரியாய்த்
தாரமாய்க் காதலியாய்த்
தோழியாய்த் தொடருகின்ற
காளிக்கும் அலுப்பாகிக்
கழியட்டும் என்கதியும்
கடவுளுக்கும் புரியாத
கணக்கின் விடையாகிக்
கனக்கும் என் கார்நெஞ்சம்
ஏங்கியே அடங்கட்டும்;
அதற்குப்பின் ஆண்டவனார்
ஆனந்தக் கூத்தாடி,
அறிதுயிலும் தான்பாடி,
அம்மையவள் அருள்முலைதான்
தான் சுரக்கத் தழைக்கட்டும் வையம். 

***

No comments:

Post a Comment