நாற்படை கொண்டு நானிலம் வென்றவர்
நன்னயம் என்பர்தம் அணிவகுப்பை
காற்படை கொண்டு கண்டங்கள் வென்றவர்
காதலிப்பர்தம் கலவகுப்பை
ஏற்புடைத்தாமென வேலைகடந்தவர்
படகெழில் பெருமிதம் தாமடைவார்
ஏற்புடைத்தல்லவை ஏளனப்படுபவை
என்றும் காதலின் படைகள் முன்னே.
கொலைவில் வளைந்து
குலைக்கும் உயிர்கள்
கல்லறையாகிப் பிற உயிர்க்குப்
பொன்றிட நிற்கும் பாழ் எனிலோ
நல்லெழிலாகி நயப்படக் குனித்து
நனிகனி இதயத் தேனூறி
வில்லுருவாகி விரைவிழிசரத்தில்
விளைவதோ வாழ்வின் விதைப்பற்றே.
ஆழிகடந்தனர் ஆர்ப்பரித்தெழுந்தனர்
அத்தனை வீரரும் ஒன்று திரண்டனர்.
வீழிடமின்றிக் குவிந்தது வெற்றுடல்
பாழிடமாகிப் போனது மெல்லுயிர்
மோழிபடப்பட மாநில போதையில்
மிஞ்சிய நாசமும் மரணமும் நாண்பட
வாழிசெயித்தது வாணுதல் ஹெலனெழில்
வாழக்கணைதொடு திருவில் காதலே.
***
No comments:
Post a Comment