Saturday, February 27, 2016

அனுபவம்

அனுபவித்துத் தீர்வது காலம்;
அனவரதம் அனுபவிக்கக் கழிவதும்
ஆற்றுதற்கிடையில் சேர்வதும் கர்மம்;
அல்லலுற்று அலமரும் உயிர்க்கு
அகத்திடை நெகிழ்வு அனுதாபம்;
அனுதினம் உன்னை நோக்கி என் பயணம்
அமைந்திடின் அமைவுறும்
என்னகத்திடை ஆசுவாசம்;
உனை நோக்கி வருவதாய்ப்
பொய்க்கணக் கெழுதி
விலகிச் செல்லுமென் கால்கள்;
விலகும் வழியெலாம்
உனை நோக்கி அமைத்ததுன் கள்ளம்
எனச் சோர்ந்து அசடு வழியுமென் மனம்;
விட்டுப் பிரிந்தோம் என்ற விரக்தி
காண மறுக்கும் நிதர்சனம் உன் பிரஸன்னம்;
விட்டுப் பிரித்தாய் என உயிர்ப் புலம்பலிடை
மட்டிடும் குறும்பு உன் முறுவல்;
தொட்டிடும் என்று என் காலம்
ஸ்தம்பிக்கும் கணம்தொறும் முறிந்து
பிரிவுறும் சூழ்ச்சி உனதோ அன்றி எனதோ
எனப் பேதலித் துளமும் நெட்டுயிர்க்கும்;
சினவிழி நாட்டுமுன் மேன்மை;
சிறுமையில் வெள்கி உன் கிருபையை
வேட்டெழும் பிரார்த்தனை என் அனுட்டானம்;
என்றிந்த விளையாட்டு முடியும்
என அறிந்த அமைதியாய் நின் மூர்த்தம்;
அறியாத வேட்கையாய் என் அகங்காரம்
நின் சந்நிதியெங்கும் அலமரலுற்றுத் தேடும்.
ஆழியாய்! காளீ! அருளாய் என்னும் 
வாழிய நெஞ்சம் வழித்துணை ஆகும். 

***

No comments:

Post a Comment