வாய்த்தவர்கள் புண்ணியம் செய்தோர்;
குழம்பல் இயல்பாகிப் போன மனத்தில்
தெளிவின் அந்நியத்துவம் தடுமாறுகிறது.
தீர்ந்தது போல் போகும் விஷயங்கள்
தம் கொடுக்குகளைப் புதைத்துவிட்டுத்
தாம் மறைகின்றன.
நான் என்று தொட்டிலில் கிடந்தது
தான் என்று உணர்ந்து தவழ்ந்தது
தன் ஆரம்ப நிலைக்கே
போகத் துடிக்கும் போலும்;
சாவிலிருந்து வெளிவந்த தொடக்கம்
புத்தூக்கமாகிப் புரியாத களிப்பில்
புறமெங்கும் மேயும் ஆவினமாய்ப்
புலனூதும் இசைக்கே மயலாகிப்
பயிலும் பரத்தின் குழல் நாடிப்
போவதும் வருவதுமாய்ப் பரிதவிக்கும்.
விட்டுப் பின் பற்றும் முனைப்பும்
விடாது பற்றும் விழைவும்
வினோதச் சுழலாய் வாழ்வும்
அனாதையாகித் திரியும் சந்தையென
விதியும் விரசமாகிச் சிரிக்கும்;
வெள்கும் உள்ளத்தில் ஒளியும் கள்ளம்
எள்கல் இலாத இறைக்கும் ஏளனமாகும்;
அள்ளல் வன்சேற்றுப் புன்னிலமாய்
அடிசறுக்கும் உணர்ச்சிகளிடை
நெடிதுயர்ந்த உணர்வின் வேர்
எட்டும் எட்டாதும் யதேச்சையாய் இடரும்;
படிந்த வெறுப்பின் பாறைகளாகிப்
பகல் வருத்தும் பொய்த்த கனவுகள்;
நனவின் அடிசுடும் அந்நாளும்
இருளின் கொடுங்குளிர் எனை வாட்டும்;
உருவு கரந்த நின் முறுவல்
திரும்பிய கணமெலாம் எனைத் தெருட்டும்;
பின் மருட்டும் மயக்கெலாம் எனை உருட்டக்
கன்னக் குழி விழும் உன் நகையில்
முன்னம் நம் உறவு உள்ளும்
உயிரின் விடியலும் கறுக்கல் கொள்ளும்.
***
No comments:
Post a Comment