Friday, February 26, 2016

வாழ்வின் பயன்

மனித வாழ்வின் பயன் கடவுளை அடைவது.
அடையாமல் போனால் வீண்.
ஐயோ வீணாய்ப் போய்விட்டது
என்று உட்கார்ந்து அழ ஓர் ஆள் மிஞ்சப் போகிறதா?
அன்றாட வாழ்க்கையே போவது பெரும்பாடு.
மன்றாடித்தான் ஒவ்வொரு கணமும் கழிகிறது.
மல்லுக்கு நிற்கும் புதுப்புது வினைகள்
கண்ணும் அதன் கூட்டாளிகளும்
அனைத்துத் திசைகளிலும் ஆளை இழுப்பதும்
நாற்பக்கக் குதிரைகள் கட்டி
ஆளைப் பிய்க்கும் கோர தண்டனையாய்
ஐம்புலன் நடுவில் அய்யோ பாவம் ஜீவன்.
இதற்கப்புறம் தவ வாழ்க்கை
அதற்கப்புறம் ஆன்மிகம்
இவை முடிந்ததும் பகவத் ஸ்மரணைதான்
இந்த ஒன்று தீர்ந்துவிட்டால்
அப்புறம் யோகம் ஜபம் தியானம்தான்;
ஆண்டவா! மனிதனாய்ப் படைத்து
மனத்தையும் கொடுத்து,
நின்னை நினைக்கவும் கொடுத்த நீ
நரக வேதனைகளின் நடுவே
நான் ஏமாந்த கணங்களின் ஊடே
நடுநாயகமாய் இருப்பதும் உன் புன்னகையோ!
கெடுவைத்துக் கோ தண்டம் இடும்
கர்மங்களுக்கு என்னை விற்றாய் எனில்
அப்புறம் என்ன பாசம் மண்ணாங்கட்டி
வந்து வந்து பார்த்துப் புன்னகைக்கும் விரசம்?
ஒரேயடியாக என்னைத் தொலைத்துப் போ!
போய் அடியார் குழாங்களில் உன் புகழ் ஓது!
நம்பி வந்தது ஒரு மூட ஜன்மம், முட்டாள் ஜீவம்;
சிறிதே உணரவைத்துப் பொறிபுலன் காட்டில்
உலகியல் சந்தையில்
கர்ம பலன்களின் ஏலத்திற்கு விட்டேன்!
என்ன வினோதம்! என் லீலா வினோதம்!
என்று எங்கும் உன் புகழ் பரவ
நன்று நான் உதவினேன் ஆயின்
பொன்றிடச் செய்யும் என் வலியெலாம்
ஏதோ பொருள் உள்ளன போலும் என்பேன்.
அதை விடுத்து
மனித வாழ்வின் பயன்
கடவுளை அடைவதே என்றால்,
அடையாமல் போயிடின் வீண் என்றால்,
அய்யோ வீண் என்று அலமற
ஓர் ஆளும் தேருமோ சாமீ!
அறியேன்
அகங்கார மனோரதம் ஏறி
அழுக்கில் வளைய வருவேன்
புழுவிலும் பெரியன் என்பேன்
வழுவிலா வாழ்க்கை என்று
பாழிலே கதி என்று இருப்பேன்.
ஏழரை என்ற ஒன்று
மும்முறை வாழ்வில் என்பார்
மூடர்கள் வாதம் அதுவாம்;
எத்தனை எத்தனை முறைதான் நானும்
ஏழரை விதங்கள் பட்டுப்
பாழறைக்குள் இருந்து
பழகிய நெடுநாள் கைதி
பகலினைக் காணக் குலையே
நடுங்கிடும் செய்தி ஒத்து
உடு ஒளிக்கும் கண்கள் கூச
நடுங்கினேன் அம்மா!
படு பயங்கரங்கள்
படப்படப் பழகும் என்பார்;
பாவி என் பக்குவத்தில்
பாங்கதும் இலையாய்ப் போகப்
பரமனின் பொழுதுபோக்காய்ப்
புதுமைக்கும் புதுமையான
பாடுகள் படவே என்று
பழமைக்கும் பழமையாய்ப்
பயின்றவன் நீ நினைத்தால்
நயந்திடும் நிலைப் பேறெங்கே?
கயம் வற்றப் புரளும் மீனாய்
நின் அருள் வற்றத் துடிப்பதல்லால்?
கவலற்க காக்கும் கடப்பாடுடைய அம்மா!
கடப்பாட்டினைக் கேட்பவர் யாரோ?
கடவுள் நீ மாறுவாய் என்றால்?
குதிரைகள் இளைத்துத்தாம்
ஓய்வெடுக்கின்ற போழ்தில்
உறவென உன்னை இன்னும் நம்பி
உரத்துக் குரல் எழக் கூவுகின்றேன்;
குழல் மட்டும் உன் தோழமை அன்று
என் குரலும் உன் தோதாய்த்
தொண்டைக் குழிக்குள்ளே புதைந்ததென்னில்
அண்ட பேரண்டம் எல்லாம்
ஆக்கியே, அளித்துப் பின் கரந்து
உயிர்க்குலம் அனைத்தின் உள்ளே
நிலவும் நீ நினைவு செய்தால்
மலர்ந்திடும் உண்மை வாழ்வு;
இலையெனில் இல்லாமைக்கே
ஏலமாய் விடுக.
கடவுளை அடைவதே
மனித வாழ்ககையின் பயனாம் என்றே
நனிகளி கூர்ந்துரைக்கும்
நல்லடியார் குழாத்தினுள்ளே
பொல்லாத ஒன்றின் சாவு
பொங்கலிட்டுக் கொண்டாடச் செய்!
அம்மா நானும் உன் சேய். 

***

No comments:

Post a Comment