Friday, February 26, 2016

வன்மம்

ச..என்னென்ன வன்மங்கள் மனஓட்டத்தில்
இந்த இலட்சணத்திற்கு
அன்பு என்று வாய்கிழியப் பேச்சு!
வன்மங்களைப் புதைத்து
நட்டுவைத்த வண்ணமலராய் நேசம்.
புதையுண்டவற்றின் ஆவிகள்
சொல்லிடுக்குகளில் தொங்கும்.
சொற்பொருள் விடிய மறையும்.
சுகத்தின் உள்ளும் வன்மம்
சோகத்தின் உள்ளும் வன்மம்.
நான் என்ற ஒற்றைக் கர்ப்பத்தின்
நூற்றுவர் பெருக்கமாய் வன்மம்.
அனைத்தையும் துடைத்தொழித்த இருட்டாய்
அகப்பாழின் அருஞ்சுர முருட்டாய்
உகப்பென்ற உள்ளப் பூவைக் கருக்கி
வெறுப்பில் ஊறவைத்த வெறுமைப் புதை
சரி போகட்டும் என்று சுதாரித்தெழும்
முதல் சிரிப்பையும் விழுங்கும்.
வானியல் கூறும் அண்டக் கருந்துளை
பிண்டத்துள்ளும் உண்டு போலும்
ஒளியுவகையெல்லாம் உள்கரந்து
களிப்பின் விதைகளும் வறுபட
அளிக்குணம் அமிழ அமில துர்க்குணமாய்
ஒளிக்கும் இந்தப் பாழ் எங்கிருந்து?
ஊக்கத்தையெல்லாம் உள்நின்று வற்றும்
இந்தப் பாழிருள் வெப்பு
எங்கோ நான் என்பதனுள்
பற்றிப் படர்கிறது.
புனிதம் விளையாட்டன்று. 

***

No comments:

Post a Comment