படவரவின் மிசைக்கிடந்த
தென்னரங்கத் திருநகரில்
தரணிமிசைத் தவழ்ந்திட்டு
நினைவெழுந்து நெஞ்சில்
கலையெழுந்த நாள்முதலாய்
பாரதி யார் என்றே நான்
கேட்டுவரும் பழக்கம்தான்.
ஆனாலும்....
பாரதியை இனங்கண்டு சொன்னாரும்
உண்டோவென்றால்
நேருரைக்க வொண்ணாத
நிவந்த திருவுருவை
நன்று இது நன்று அது
நன்று உது என்றே
நாற்றங்கால் நட்டதுபோல்
நட்டுவிரல் காட்டலின்றி
ஊற்றம் மிக ஊன்றி,
உவப்போடு உள்ளெழுந்த
தேற்றம் மிக உயிர்நிலையைக்
காட்டிநின்றார் யாருமில்லை.
ஆயிரமாயிரம் ஆண்டுகள் தவத்தில்
போயின பின்பு புதுத்தமிழ் பூத்தது
தோய்ந்த வானிருளில் துலங்கிய சோதி
வேய்ந்தது கவிதை விரிகதிர் உலகில்
பாய்ந்திட எழுந்தது பாரதிப் பரிதி
காலக் கருவின் சுமையில் அயர்ந்த
தமிழின் களிறு ஈன்றதோர் கன்று நன்று
கன்னித்தமிழ் காக்கக் காலம் கரு உயிர்க்கக்
கர்பத் திருவாகிக் கவியின் உருவாகிச்
சொர்க்கக் கதவாகித் திறந்ததும்
சுப்பையா வருகை
சோற்றுக்கு இல்லாது
சுதந்திரத்தைப் பாடிநின்றான்;
ஊற்றுக் கவிதான் ஆனாலும்
ஒருநிலையில் நிற்கவில்லை;
கட்டுண்ட நாட்டின்
காவல் உடைக்கவந்தான்;
தளைபட்ட தேசத்தின்
தலைவிதியை மாற்ற வந்தான்;
தெய்வத்தில் ஒற்றுமையைத்
திரட்ட வந்தான்;
தொய்வுற்ற மக்களுக்குத்
துடிப்பூட்டிப் பாடவந்தான்;
தேசியத்தின் சங்கொலி;
தெய்விகத்தின் திருமணி;
வேதாந்த வீட்டிற்குப்
படிகட்டிய பாவலன்;
சித்தாந்தம் செப்பவந்தான்;
சீர்வேதம் விளக்கவந்தான்;
அரவிந்தக் காட்டினிலே
உலவிவந்த தென்றலவன்;
நிவேதிதை அருள்பெற்றான்.
நிர்மலத் திலகனுற்றான்;
நிமிடத்திற்கொரு பாவம்
நேரத்திற்கொரு மனநிலை;
முண்டாசுப் பாவலன்
முறுக்குமீசை ஆவேசம்;
நறுக்கான பதில்கள்,
உருக்கான குரலிசை;
செருக்கான நடை, ஆனாலும்...
சமயம்போல் இருப்பதில்லை;
சாமி! அவன் சுபாவம்
சற்றேனும் புரிவதில்லை;
என்றாலும்....
கண்ணன் பாட்டு அடடா!
கண்ணம்மா காதலியாம்!
குடுகுடுப்பைக் காரன்
கோடங்கிப் பாட்டோ...
ஆனந்தப் பள்ளு, அது போல்
இலையெங்கும் விட்டுத் தள்ளு;
பாஞ்சாலி சபதமொன்று
போதாதா பாரதிக்கு?
விநாயக ரகவல்
விளைத்திட்ட பக்தியென்னே!
காளி பராசக்தி
கடைக்கண் வைத்த கவிஞனவன்;
ஊழிக்கூத்தொன்று போதும்
உண்மைச் சாக்தன் என்பதற்கு;
தோத்திரப் பாடலினைப்
பாடிய புதுப் பண்டாரம்;
தொத்திய மாலை மயக்கில்,
துவள் நெஞ்சில்,
தூண்டியதோர் கற்பனையில்
துவண்ட சிறுபுள்ளாய்த்
தோற்றுமொரு குயில்பாட்டு
வேதாந்தம், வேதாந்தம்.
வசனக் கவிதை வரிக்குவரி
வேதமறை தமிழில்;
சுயசரிதை அறுபத்தாறு
சித்தர்களின் ரகசியம்
இவ்வாறு பலப்பலவாய்
இயன்றவரை பிடித்துவைத்து
முழுக்காட்டி முக்காலும்
இதுதான் பாரதியென்றே
இயம்பிவந்தார்; இவர் நடுவே
பாரதி யார் என்ற கேள்வி
விடையேறா வியன்சிவமாய்
விழித்தது அல்லால் விளக்கம் இல்லை;
கவிதையின் முற்றத்தில்
கடவுளரின் கண்பொத்தி விளையாட்டில்
ஞானரதமேறித் தான்
கடவுளர் உலகையெல்லாம்
வேடிக்கை பார்த்த விறல்மிடுக்கும்
தமிழ்க்கவியின் மாயங்கொல்?
தண்டமிழின் மந்திரங்கொல்?
செய்யுளில் செங்கல் ஜல்லி
செப்படி வித்தை யெல்லாம்
கச்சினில் கொங்கை மாதர்
கலாபக் காமப் பித்தையெல்லாம்
வீரமே சோரம் போக
வாகையோ சோகையாகி
வித்தையும் வெளிறிப் போக
விரசமே சரசமாகக்
கவிழ்ந்தசமீன் சபைக் கணக்கின்
சங்கடங்கள் சமிக்ஞை காட்டும்
சங்கரன் கதையும் என்ன?
வேதத்தில் வேள்வியுண்டு
வேள்வியில் பலனுமுண்டு
பலனில் சொர்க்கமுண்டு
சொர்க்கத்தில் மீட்சியுண்டு
மீண்டிடில் பிறவியுண்டு
பிறந்திடில் மரணமுண்டு
அதுவரை வேள்வியுண்டு
வேள்விக்குயர் வேதமுண்டு
இதைத்தான் நாம் கேட்டதுண்டு
ஆனால்
வேதத்தில் கவிதையுண்டு
அதை விளக்கவோர் வழியுமுண்டு
என்றுரைத்த கவியுண்டென்றால்
வேறுயார் இங்கே உண்டு?
காலப்பொன் சொல் பெய்து
குலையாத கற்பனையை
நிலையான நனவுலகை
நாட்டவல்ல நெடுங்கனவைத்
தமிழ் என்னும் காயகல்பத்
தாய்நிதியாய் நமக்களித்து
அமிழ்துண்ணச் சென்றிருக்கும்
அமரகவி பாரதியில்
ஐக்கியமாய் நின்று உணர்ந்தோமானால் ..
பாரதியில் உண்டுண்டு உரைத்ததெல்லாம்
வேர் அதுதான் யாதென்று விளங்கக் கேண்மின்.
புடைபரந்த வடிவிற்குள் பூரிக்கும் பெட்பில்
பொன்றாத உயிர் எதுவென்று உணர்ந்தோமானால்
பாரதி ஒரு கவிஞன் - கவனம்
பாரதி ஒரு கவிஞன்
முதலினிலே இடையினிலே
முற்றும்தானே ஒரு கவிஞன்.
கவிதையை அவனிடத்தில் தேடுங்கள்;
தேடுமுன்னே திரைத்துவரும் தீங்கவிதை.
கொண்டு ஆடி வருகின்ற கோலம் ஒன்றைத்
தெய்விகமோ, தேசியமோ,
திகழ்வேதாந்த சித்தாந்த தத்துவமோ
எதுவானாலும்....
கவிஞனாய்ப் பேசுகிறான் பாரதி
என்றே கவனத்தில் கொள்வீரேல்
கருத்தில் பிழையற்றீர் ஆவீர்.
உயிரான நிலைவிட்டே
உத்தமக் கவிஞன் தன்னைக்
கற்பனைச் சிறகாடக்
களிக்கின்ற கோலம் ஒன்றைச்
சங்கற்பச் சதுராடி
வருகின்ற வேடம் ஒன்றை
வியன்கவியின் சுயமென்றே
விழைந்து நீர் வேட்பீராகில்
உமக்கு இழப்பு உறுதியாகும், அவனுக்கில்லை.
உரைக்கின்ற வேதாந்தம்
அவன்கொண்ட களச்சூழல் - அதில்
திரைத்துவரும் கவிதை அவன்
தருகின்ற சேதி.
சேதி அதைத் தவறவிட்டுச்
சுற்றிவந்த உறை கொள்வீரேல்
பாதிப்பு உங்கள் பங்கு,
பாரதியின் உயிரில்லை அங்கு.
தேசியத்தில் கவிதைக்கு
அரங்கம் பார்த்தான்
பூசியதைத் துடைத்து உள்ளே
பார்ப்பதுவே நமது வேலை;
குயில்பாடக்..கூடுவிட்டுக் கூடுபாய்ந்து
கவிதை கோயில்கொள்ளக்
கொள்ளைத்தேன் கவிதை
கூடிகட்டி நின்றதந்த ஒளிமரத்தில்...
என்று சொன்னால்...இனிக்காது...
முக்குணம், மும்மலம், மூவினை,
முற்பிறவி, மூண்ட உயிர்
என்றெல்லாம் மாட்டிமாட்டிப்
போட்டுப் பார்த்தால்
கவிதையா மிஞ்சும்?
கவிதையைக் கவிதையாய்ப் பார்க்கின்ற
கவிதையுள்ளம் தான் வேண்டும்.
மற்றவற்றைத் தூக்கிவந்து
கவிதை ஒளிச்சாற்றில்,
கோலத் தேன்காற்றில்,
புவியைப் பிசைந்து
பூசியதாம் விண்புரையில்
பெய்துநின்றால் தாங்காது கவிதையுள்ளம்.
கவிதையுள்ளம் ஒரு காற்றென்போம்.
எவ்விடத்தும் உட்புகுந்து வந்துவிடும்.
ஆனால்...
அவற்றையெல்லாம் சுமந்துவந்து நிற்காதன்றோ!
கவிதையுள்ளம் ஓர் ஒளிப்பிழம்பு;
ஒற்றிப் படிந்த பொருள் துலக்கிப்
பொன்றும் இருள் கடிந்து,
பொற்காட்சி விரிக்குமன்றிப்
பொருளாய்த் தான் மாறிப்
பொன்றுதல் இல்லையன்றோ!
கவிதையுள்ளம் ஓர் வான்;
அனைத்தும் அதில் அடங்கும்,
அனைத்திலும் அஃது இருக்கும்,
ஆனால்.. அது மற்றொன்றாய் ஆனதுண்டோ?
ஆகத்தான் முடியுமோ?
ஆனால்தான்..மற்றது உண்டோ?
கவிதையுள்ளம் ஒரு தீ;
திறலனைத்தும் திளைத்து எழும் ஆணிவேர்;
திரண்ட பொருள்வர்க்கத் திகழ்வுக்கு மூலவிசை;
தரணிக்கே உள்ளோட்டம்..
என்றாலும்..
தீயின் இயல்பு மாறிப்
பருப்பொருளாய் ஆன கதை
பாரில், புராணத்தில், பகுத்தறிவில்
எங்கும் பயின்றதுண்டோ?
பாரதி ஒரு கவிதை;
பார், விண், உள், வெளி, உயிர், தீ -
அனைத்துமாய்ப் பயின்றிட்ட
உயிரேக்கம் -- அவனைக்
கவிதையாய்க் காணலே
நமக்கும் உயராக்கம்.
***
No comments:
Post a Comment