Saturday, February 27, 2016

கல்பதரு தினம்

கல்பதரு தினம்.
வழக்கம் போல் நீங்கள்
என் விஷயத்தில் மட்டும்
தீண்டாமையைக் கடைப்பிடிக்கும் நாள்.
எப்போதும் போல் நானும்
நீங்கள் எவ்வளவுதான்
முகம் சுளித்தாலும் சலியாது
அகம் நொந்தாலும் அயர்ந்துவிடாது
நீங்கள் உகக்கவில்லை என்றாலும்
உங்களின் திருமுன்னர் ஓரத்தில்
வழக்கமான என் பாதியிருட்டு மூலையில்
அழுவதா அமைதியா அசட்டையா
என்று புரியாமல் விழித்தபடி
உங்களுக்கும் எந்தத் தொந்தரவும் தராமல்
வெறுத்தாலும் நண்பர்கள் விலகார்
என்பதை மெய்ப்பித்தவாறே
அமர்ந்திருப்பேன்.
ஆண்டு ஒன்று போன கணக்கை
ஆதித்தனின் அரவை யந்திரம்
நிறுத்திக் காட்டும்.
ஆயினும் என்ன?
கோடானுகோடி ஜீவர்கள்
வந்து போகும் அறைக்குச்
சுவர்க் கோழி இருந்தென்ன போயென்ன?
உன் காது பழகி மறந்த சத்தமாய்
என் ப்ரார்த்தனைகள் கழியும்.
என்னால் உனக்கு ஆகப் போவது
ஒன்றுமில்லை.
உன்னால் எனக்கு ஆகவேண்டியது
என்று சொல்லி
உன்னை என்னில்
பிரிக்கப் போதிய சமத்து
எனக்கில்லை.
நீ என்ன சொல்லியும்
நான் நானாகத்தான்
இருந்து கொண்டிருக்கிறேன்.
நான் என்ன வேண்டியும்
நீ நீயாகத்தான் அருள்வது என்றோ
அறியேன். ஆனந்த நிலையில்
கையை விரித்து நீ காட்டுவதும்
ஆயிரம் அர்த்தம் உண்டென்பார்
ஆயினும் நான் என்ன செய்வது
ஒன்றுமில்லை என்று நீ எனக்கு
அளிக்கும் விடையோ அது
என என் மனம் அயிர்க்கும்;
ஆயினும் என்?
நீ அருளினால் என்ன?
அருளாது மருண்டால் என்ன?
பொருள் இல்லா உலகில் பிறப்பு
உருளும் காலம்
மாறும் எல்லாம்
ஊதிப் பெருத்த கோலம் சுமந்த
இன்மையின் பகற்கனவாய்
உயிரின் கதி ஓயும்வரை
பயிலும் அன்பில் பிரியேன் உன்னை;
பிரிந்து போன பொழுதத்தெல்லாம்
உடனிழுத்தாய் உன் முன்னர்
மடமை பூண்ட என் உயிரின் ஹாஸ்யம்
அடங்காத முறுவலோ உன் முகத்தில்?
முடங்கும் என் வாழ்நாள் அதுவரையில்
முயங்கும் என் உள்ளம் உன் அன்பில்;
அன்று அன்று உன்பால்
எழும் என் அன்பில்;
அது போதும் அன்ன பரமே!
வாழ்ந்தே போம் நீரே! 

***

No comments:

Post a Comment