Saturday, February 27, 2016

ஐயா வழி வழி...

ஐயா! கோபித்துக் கொள்ளாமல் ஒரு நிமிஷம் -- 

என்ன நீர் தத்துவ நெறிகள் படித்துள்ளீரா? தெய்வங்கள் தந்த பாதைகள் தெரியுமா? அருளாளர் பனுவல் அனைத்தும் படித்து விட்டீரா? 

ஐயா! நான் சொல்வது என்னவென்றால் -- 

உலக ஆகப்பெரும் சித்தாந்த நூல் உலகம்? 

ஐயா! நான் சொல்வதை... - 

என்ன தியரி படிச்சிருக்கீரு? சோஷியாலஜி, கம்யூனிசம், அடாமிக் தியரி, குவாண்டம் கிராவிடி, யூனிஃபைடு வயல், ஊடுபாயும் புழு, உள்ள நோண்டும் டன்னல், அநந்த திக்கில் சஞ்சலக் கயிறு? 

ஐயா! சொல்வது என்ன என்றால் -- 

என்னய்யா? பெரிய சொல்லிடப் போறீரு? என்ன இதுவரையில் பெரியோர்கள் எல்லாம் சொல்லிவிட முடியாத என்னத்தைப் புதுசா சொலிடப் போறீரு? சொன்னதெல்லாம் என்ன என்று நீரே முதலில் உணர்ந்து கொண்டீரா? 

ஐயா! கேளுங்க.. அவசரமா -- 

என்ன நீரே பெரிய மஹாஞானி ஆயிட்டீரா/? இல்லை இதுவரைக்கும் சொன்னதெல்லாம் ஒன்றுமில்லை, நீர் சொல்ல வருவதுதான் மூல சத்தியத்தின் காலாதீத அடுப்பில் அப்படியே சுட்டு நேர வருதா? 

ஐயா ! நான் சொல்வதை முதலில்..  - 

சொல்றது என்னய்யா சொல்றது? முதலில் நீர் உணர்ந்தீரா சொல்லும். 

ஐயா! ஒரு நிமிஷம் நான் என்ன சொல்கிறேன் என்று -- 

என்ன நீர் சொன்னா நாங்க கேட்கணுமா, ஏன்னா நீர்தான் பெரிய தீர்க்கதரிசி பாரும், வந்துட்டாரு, என்ன அவுந்து விழற நீளங்கியை ஒரு கையால் ஏந்தியபடி, ‘ஏதன்ஸ் நகர மக்களையா, எருக்கட்டாம்பட்டி சந்தையிலா, யாரைக் கூப்பிடப் போறீரு.? 

ஐயா! தயவுசெய்து...  - 

என்னய்யா! உன்னோட பெரிய தொல்லையாப் போச்சு. என்ன சொல்ல வரேன் சொல்ல வரேன் என்று, என்ன சொல்றீரு...அதையே.....சும்மா மணிக்கணக்கில் பொழிய ஆரம்பிச்சுடாதீரு. இது ஒன்றும் கிரேக்கமோ, வாதபீட மண்டபமோ இல்லை. மிஞ்சிப் போனா பத்து நிமிஷம்தான் மக்கள் கவனம் நிக்கும் மாடர்ன் அதிவேக யுகம். சொல்லித் தொலையும். என்ன? 

ஐயா! கொஞ்சம் வழிவிட்டு நகர்ந்துகொண்டால் நான் என் வழியே போய்விடுவேன்.... ஏகப்பட்ட வேலைகள் கிடக்கு .. ப்ளீஸ்.... 

***

No comments:

Post a Comment