Friday, February 26, 2016

நடுவானில் ஏணி

ஏனோ ஓர் ஏணி நடுவானில்
ஊசலாடிக்கொண்டு இருக்கிறது.
இறக்கிவைக்கத் தெரியாமல்
இறந்து போகிறார்கள் மக்கள்.
மாட்டிவைத்தவரைக் கேட்டால் தெரியும்
எந்தக் கொக்கியில் தொங்கும் என்று.
தரையாவது ஏணியைத் தொட்டால்
ஊசல் நிற்கும்.
ஊழிக்கு ஒருமுறை
தரை அதனைத் தொடும்
என்ற பேச்சுமட்டும் பரவலாக வருகிறது.
ஏற்றும் ஏணி ஏனோ இறக்குவதில்லை!
இறக்கும் ஏணியில் ஏனோ நமக்கு
ஏறத் தெரியவில்லை
பறக்கின்ற ஜாதிக்கு
ஈதொன்றும் பிரச்சனையில்லை.
ஏணியில் அமர்ந்தும் எச்சமிடுகிறது
ஏணி தலையில் விழாதவரை
தப்பித்தோம் என்று நகர்வோர் தலையிலும்.
ஏணியைப் பிடிக்க எம்பியே
வாழ்க்கை கழிகிறது.
எழுந்து நின்ற குற்றம்
அண்ணாந்து பார்க்கிறோம்.
நாற்காலிட்டுத் திரிந்து கொண்டிருந்தால்
இந்தப் பிரச்சனையில்லை;
தரையின் பரப்பளவில்
காலம் சாயுஜ்யம் ஆகிவிடும்.
வானம் ஒரு பிரச்சனைதான்;
கண்ணுக்குத் தெரியா ஏணிகளைக்
காற்றில் ஊசலாட விடுகிறது.
யார் இறங்கிவர? அன்றேல்
யார் மேலேற?
வானத்தையும், மண்ணையும்
பிரித்துவைத்த மேஸ்திரி
கழட்ட மறந்து போனதாய்க்
கதைவிட்டாலும்
கண்ணுக்குத் தெரியாத ஏணிகள்
வானில் தொங்கப்
பார்க்கத்தானே செய்கிறோம் ஒருவிதத்தில்.
ஆனால் நிச்சிந்தையாய்
அமர்ந்துவிடுவோருக்கு
வானும் மண்ணும் ஏணிகளும்
பிரச்சனை எதுவும் உண்டோ?
விடை கண்ட நிறைவோ
விடை வேண்டா அமைதியோ
ஏதோ ஒன்று குமிணகையாய்ப் பூக்கும். 

***

No comments:

Post a Comment