Friday, February 26, 2016

நிகழின் விரிவு

சகல புவனங்களும்
முப்பத்து முக்கோடி தேவர்களும்
யக்ஷ கின்னர கந்தருவ கிம்புருஷ
தானவ ஸுர அஸுரர்களும்
ஆதியும் அநாதியும்,
ரிஷிகணங்கள், தூதர்கள்,
நன்மை தீமை, உயர்வு, தாழ்வு
மூன்று காலம்
அதல சுதல விதல
பாதாள பல லோகங்களும்
எல்லாம் நெருக்கியடித்துக்கொண்டு
ஒரே இடத்தில்
ஒரே புள்ளியில்
இப்பொழுது நடந்து கொண்டிருக்கும்
இந்தக் கணத்தின் உள்ளேதான்
முட்டி மோதுகின்றன.
நிகழ்காலத்தை
விரிவாக்கம் செய்ய
வழியுண்டோ?
இருப்பின்
விரைத்துப் போகும் பிரபஞ்சம். 

***

No comments:

Post a Comment