வெறுமையூடு உகுத்த அருவியாய்
வாழ்வின் தடமொற்றும்
உயிரூக்கப் பைம்புனல்
பயிரென்று கிளர்ந்தது பகற்கனா
அயிர்ப்பும் உயிர்ப்பும்
ஏக்க நுகத்தடி ஆடி
விளைந்தது அயர்வு.
தளையற்ற கதிகள்
தள்ளாடும் அடிகளில்
சுள்ளென்ற வெப்பாய்ச்
சுடுகின்ற முள்ளாய்ப்
பதித்தன பாச முத்தம்.
உருள்கின்ற உலகில்
உலப்பிலா நேசம்
மருள்தரும் தோற்ற மாயம்.
அருளுக்கு ஏங்கிடும்
அகம் சோர்ந்து குடிப்பதும்
இருள் தரும் புன்மடிப் பயன்.
இருக்கின்றதும் யார்?
இருக்கின்ற நாளெல்லாம்
தொடர்கின்றதும் யார்?
தொடராமல் ஒரு நாள்
இறக்கின்றதும் யார்?
எனக்கேட்டு மெனக்கெட்டு
மனக்கட்டில் முனைப்பெட்டும்
நிர்மூடம் அதுவும் யாரோ?
நிச்சல நிராலம்ப
நிர்விகார நிலையென்று
நீள்விழி நிமிர்த்துகின்ற
நேரிய உணர்வன் யாரோ?
பாரிய வாழ்வெலாம் பகட்டினில்
படிந்து ஓய்ந்து பதுமையாகப்
புல்லிய ஜீவன் பொன்றாத சாட்சியாகிப்
பயிலுமோர் நாடியாகப்
பனித்திடும் அறிவின் தேட்டம்.
தனிமைக்கே தலைப் பிள்ளையாகத்
தவிட்டிற்கே விற்ற தாயாய்த்
தலைப்பு நுனி மூடிச் சிரிக்கும்
கலை வல்ல காளி!
அலைகின்ற வாழ்வில் ஒருநாள்
அன்றேல் வாழ்வின்
அலை ஓய்ந்த பின்னர் ஒருநாள்
அன்றேல் உன் சிரிப்பின்
கலைவேய்ந்த கணத்தில் ஒருநாள்
நிலைகுத்தி நிற்கும் உன் பார்வை
அன்றேனும் முலைகடுக்கும் உன்னருளின்
நிலம் பாய்ச்சுகின்ற நிபாதம்
நீக்குக என் உயிரின் தாகம்.
***
No comments:
Post a Comment