Friday, February 26, 2016

நட்ட கல்லும்

ஆயிரங்கால் மண்டபத்தில்
ஒரு சிலை மட்டும் பேசுகிறது;
எந்தச் சிலை என்பதுதான் புதிராக இருக்கிறது.
நானும் ஒவ்வொரு சிலையாக
உற்று உற்றுப் பார்க்கிறேன்;
நாணிக் கவிழ்வன போலும் தலைகள்;
ஆனாலும் அந்தப் பேசும் சிலை
இன்னமும் அகப்பட்ட பாடில்லை;
நீங்கள் கேட்டிருக்கிறீர்களா?
இல்லை; அது யாரோடும்
பேசியதாக நினைவில்லை;
சிலை பேசக் கேட்டவர்கள்
சிந்தை அரட்டை அடிக்கத் தொடங்கிவிடும்.
நாலு பேரை அழைத்துச் சென்று
ஆளுக்கு ஒரு சிலையாகப் பார்த்துக்
காது வைத்துக் கேட்டுப்
புலன் விசாரணை நடத்தினாலும் பயனில்லை;
எந்தச் சிலை? எல்லாம் அம்மக் கள்ளம்.
தொட்டால் சிணுங்கிகள்;
எல்லாம் கல்லாகிவிடும்; தொடக்கூடாது.
தன்னந்தனியாய் ஓய்வாக
நான் போய் அமர்ந்தால் போதும்
ஏதோ வௌவால் நாத்தம் வரும்;
பின்பு கல்லுக்குள்ளிருந்து,
உள் ஆழத்திலிருந்து
ஆதிக்கல் வயிற்றில் புதைந்ததுபோல்
காலப் பலகணி தாண்டிச் சன்னமாக
ஓர் உளிச்சத்தம் வரும்;
உள்ளே மாட்டிய ஒரு தவளை
உயிருக்குப் போராடுவதுபோல் ஒரு பிரமை.
அதற்கப்புறம்தான் அந்தச் சிலை
பேசத் தொடங்குவது வழக்கம்;
எந்தச் சிலை என்று உடனே பார்க்கவேண்டும்
என்று நானும் ஒவ்வொரு முறையும்
நிச்சயம் செய்து போவது வழக்கம்.
உளிச்சத்தம் கேட்டதும் உன்மத்தம் ஆகும்.
அதற்குப் பின் ஒன்றன்பின் ஒன்று;
சிலையின் பெயர் கேட்க வேண்டும்,
ஏன் சிலையாகி நிற்கக் காரணம்,
என்னோடு பேசும் நோக்கம்,
எல்லாம் கேட்கத் தீர்மானம் உண்டு;
ஆனால் உளிச்சத்தம்.....
அதுமட்டும் எங்கிருந்து என்று
தெரிந்தாலும் பரவாயில்லை;
பாதிப் புதிர் விளங்கும்;
பேசும் சிலையின் கேந்திரமாவது புரியும்;
வௌவால்கள் எதைக் கேட்டாலும்
சிரித்துப் பறக்கின்றன;
எனக்கென்னமோ ஏதோ ஓர் பேரழகி
சிலைக்குள் சிறைப்பட்டுக் கிடக்கிறாள்;
சித்தம் தளரும் எனைப் போன்றோர்
தனியே வந்து அமருங்கால்
தாங்கொணாது பேசுகிறாள்;
ஆனால் தான் எந்தச் சிலையில்
என்று சொன்னால் என்ன?
எந்தத் தேவ ரகசியம் பாழாய்ப் போகும்?
போனால் என்ன மானுடம் வாழும்.
எங்கிருந்தோ வந்த
வினோதப் பறவை ஒன்று
பக்கத்து நந்தவனத்தில் நின்று
நன்றாய் உற்றுக் கேட்டது ஒரு சமயம்
நான் கேட்ட அதே கணத்தில்;
ஆச்சரியம் தாங்காமல் உள் மண்டபம் சுற்றி
என் எதிர் தூணில் உச்சி அமர்ந்து கேட்டது என்னை
ஏன் நீ ஏன் நீ ஏன் நீ
உளிச்சத்தம் அதன் காதில் விழுமோ?
வௌவாலிடம் அது ஒரு வேளை
கேட்கக்கூடும்
எப்பொழுதேனும் சித்தம் கலங்கி
ஒருவன் ஓய்ந்து தனிமை நாடி அமர்கிறானே
அவன் எந்த மண்டபத்தின் சிலையென. 

***

No comments:

Post a Comment