ஆஷாடபூதியாகிக் கழிந்தது வாழ்வு.
ஆரூடமும் பொய்த்தது.
நிர்மூடமாகப் பல்லிளித்து
நிற்கும்படியானது காலக் கூண்டில்.
வானத்தில் ஜாகை அமைக்க எண்ணிப்
பள்ளத்தில் விழுந்து கிடக்கிறது ஜீவன்.
என் மூக்கறுத்த எக்காளத்தில்
தெய்வங்கள் குடித்துக் கிறங்கும்.
உன்மத்தமாகிப் போனாலும்
ஓரிழவும் புரியாமல் போய்ச் சேரலாம்.
உயிர்க்கொலையாய்ப் பரிதவிக்கப்
பாதி சொல்லிப் போனவளின்
சேதி தெரியாமல் சுடுகின்ற நனவு
சுருட்டி அடித்துப் போய் ஒண்டும் கனவுகள்
தீய்ந்து பொட்டல் காடாய்
ஆகிய நினைவுகளுக்கு
ஆகுதியாய் அவ்வப்பொழுது என் உள்ளம்;
வானைத் திரித்து வண்ண மயிலாட்டம்
ஆடுகின்ற என்னொத்தார்
ஆங்காரத்தில் பலியாகிப்
போங்காலம் பொங்கல் வைத்து
உண்ணும் இவ்வுலகின் நாயகிக்குக்
கண்ணும் உண்டு; காதும் உண்டு.
எண்ணும் சிந்தனைதான் உண்டோ அறியேம்.
சிந்திப்பது அற்ப மனிதப் பழக்கம்;
சித்தில் சிலம்பாடிச்
சீவனுக்குள் சிதாகாசப்
பந்தக்கால் நட்டுவைத்த
பரத்திற்கேன் சிந்திக்கும் பாரம்?
முந்தி எழுந்த மூலப் பொருளில்
முக்கால வட்டாடிப்
பொற்காலக் கணக்கும், புற்காலக் கணக்கும்
விற்றுவந்த பற்றுக்குள்
வைத்துப் போனவளை
எற்றுக்கு நாம் கூவுவது?
இற்றைப் பொழுது நிஜம்;
மற்றவற்றைக் கழுவிவிட
மதுவுண்டு;
மாமோகலாகிரியாய்
மறதியுண்டு;
சுற்றிவரும் கணக்கினிலும்
ஒரு சொகுசு உண்டு;
சாமாறு வரும் வரையில்
சங்கடங்கள் பழகிப்போய்
நாமார்க்கும் குடியல்லோம்;
நமனை அஞ்சி
நயப்பதெலாம் நைந்துவிழ
நாம் வீழும் நாள்வரையில்
நாம் எதையும் அஞ்சகிலோம்;
ஓங்காரப் பெருவாழ்வும்
ஓங்கும் உள்ளத்து வேதனையும்
சோமரஸமாகிச் சொக்கத்தான்
ஆடிடுங்காண்!.
***
No comments:
Post a Comment