Saturday, February 27, 2016

சோதனைச் சதுரம்

சோதனைச் சதுரத்தில்
சுற்றிச் சுற்றிச் சுகம் நாடிப்
பொத்தானே கதியாகிப்
போய் நிற்கும் எலிக்கு
எவ்விதத்தில் வேறானோம்
சோராமல் சுற்றிவந்து
சுகவில்லைக்குத் துடுப்பழுத்தும்
அகவிலைதான் வாழ்வென்றால்
புகவிட்டதுதான் யாரோ?
சகமாயை என்ற சாத்திரமும்
யார் கூற்றோ?
அகலாத ஆட்டமென
வளையவரும் சம்சாரச்
சக்கரத்தின் நாபியிலே
உட்கார்ந்தால் ஒருவேளை
தப்பிக்க வழியுண்டோ?
மெய்ப்பிக்க வழியின்றி
எல்லார்கைச் சீட்டையும்
போட்டாடிப் புலனழிக்கும்
பொல்லாங்கோ மனமழிக்க
வில்லாங்கே விட்ட சரம்
விலாவில் வந்து தைப்பதுபோல்
உய்வதற்கு முனைந்ததெல்லாம்
உள்குத்தாய் ஆகிவிட்டால்
எள்கத்தான் இவ்வுயிரோ?
விள்ளமுடியாத வேதனைக்கே
வாடிக்கையாய்ப்
பழகிவிட்ட பதவிசுக்கே
அழகிதென்று ஆக்கிவிட்டுச்
சோதனை ஆட்டத்தை
நிறுத்தும் பொத்தான் மறந்துவிட்ட
நிர்மலனார் யாரேயோ? 

***

No comments:

Post a Comment