Saturday, February 27, 2016

குறள்

அகர முதலாகி ஆனதோர் காப்பாம்
பகர வெளிதோ பரம். 

ஆன பிறவிக்கும் அச்சாகும் கர்மமெனும்
ஊன மறும்வழிதான் என். 

இல்லெனில் இல்லாகும் உள்ளதாம் உள்ளதெனின்
நல்லதே மாயை இது. 

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் இவ்வுயிர்கள்
தாம்தன்னை உய்த்துணருங் கால். 

உண்மையுமாய்த் தண்மையுமாய் உள்ளதொன்றைத் தானறிந்தால்
கண்ணாகி நிற்கும் மறை. 

ஊதிய பேருலகில் உள்நின் றுலவுவதால்
சாதிக்கும் சத்தியமிப் பார். 

என்று முளதாகி எவ்விடத்தும் நின்றியலும்
நின்றளந்த மாலின் அடி. 

ஏக்கம் உடைத்தாகி ஏற்கின்ற நுண்மதியால்
ஆக்கம் அடையும் உயிர். 

ஐயமும் போயகல அஞ்ஞானம் தானவிழும்
பையவே போதமெழு போழ்து. 

ஒன்றும் உலகும் உயிரும் உடலெனவே
என்றும் நிலவும் பரம். 

ஓத்தில் உளதாகி உள்ளத்தின் கண்ணுக்கே
பூத்த பொருளே பரம். 

ஔடதமாய் இப்பவநோய் பொன்ற அகத்தின்கண்
மௌனச் சுடர்காட்டும் தான். 

***

No comments:

Post a Comment