Saturday, February 27, 2016

அவலம்

ஆன்மிகத்தைத் தோண்டித்
தொலைதூரம்வரை துடுப்பு வலித்தாலும்
தொடுவானில் ஒரு பக்கச் சிறகைத்
தொலைத்ததுதான் பாக்கி.
பல அடுக்கு விண்மாளிகையின்
உச்சிமாடி ஓய்வுப்பந்தலில்
கடைசி விரக்தியின் வோட்காச் சொட்டு
நடைமுறை வாழ்க்கையின்
பல்லை இளித்துக் காட்டுகிறது.
நகரம் அலுத்து
கிராமம் வெறுத்து
வெளிநாட்டில் மேய்ந்த
மந்த புத்தி
சொந்த ஊரின்
பிடாரி கோவில் திண்ணையில்
எந்தத் திக்கையோ பார்த்து வெறிக்கிறது.
வியாபாரத்தைக் கச்சிதமாக முடித்துக்
கடைசி நாள் பேச்சையும்
ஒருவழியாய் முடித்துப்
பாட்டைக் கூவிவிட்டார் துறவியார்.
நேரங் கெட்ட நேரத்தில்
சேவலின் கூவல்
நேர்த்திக் கடனுக்குப் பயந்தோ
நேரே தெரியும் கோழிக்கு நயந்தோ
பாவம் பைத்தியத்தின்
பதம் அழிந்த மனம்
புன்சிரிப்பை ரணமாக்கிப்
புலனொழுக நின்றது
கைக்குழந்தையின் பார்வையில் மட்டுமே
தீர்க்கம் தெரிந்தது
உலகம் அதைக்கண்டு பரிவு காட்டியது
நாளைய உலகின் பிரஜையென
அர்த்தமற்ற அவலங்கள்
பொங்கிய உலையாய்க் காலம்
போயவிந்தடங்கிய கடைநாள் யாமம்
தேய்ந்துணர்வு துயிலில்
தொலைந்திடும் முன்னம்
தேற்றம் வேண்டிக் கேட்பதும்
ஒன்று;
அதன் விடை?
உருவமற்றவனாய்
எனை உணர வாய்க்கும்
கணத்தின் இடைகழியில்
கூறவல்லன் ஆவேன் போலும்.
கொட்டும் இமை கொட்டிக்
கட்டும் புலனழியப்
பட்ட அனுபவங்கள்
சுட்ட கணுக்களிடைத்
தட்டுத் தடுமாறி மனம்
விட்டு விடையேறி குணம்
நெட்டுயிர்ப்பாகி தினம்
நிட்டையெனக் கூடும்
நட்டநடுத் துயிலின் முனம்.

***

No comments:

Post a Comment