பதைக்கிறது உள்ளம்.
தனிமையின் தழல்கள்
தண்ணென்று தீய்க்கும்.
கனிந்த ரணமாகிக் காலம் கடுக்கும்.
மனித்தம் இனிக்கும் மரணம் தொனிக்க
அநித்தம் உருளும் அலுப்பில் பனிக்கும்.
முனிந்தாய் என நான் மகிழ்ந்தேன்;
மறந்தாய் என நான் இறந்தேன்.
எறிந்தாய் என நான் கிடந்தேன்.
என்னுள்ளும் ஒரு புதைகுழி
தன்னுள்ளே எனை அமிழ்த்தும்.
கண்ணுள்ளே தணல் கரிக்கும்
நெருப்பொன்றும் நீர்வடியும்.
அருவியாகி அகநோவு
உருவி உருவி உயிர் ஈர்க்கும்.
அருவமாகி ஒரு துயரும்
வெருவ வெருவ விலாப்பெயர்க்கும்.
கரியமேனியிடை ஒரு மின்னல்
காணவரிதாகிக் கண்பட்டும்
போன காலமென எதிர் நிகழும்
மானம் பெரிதாமென மூச்சிழைக்கும்.
கானமெனக் கருத்து அகத்த ஆழம்
ஊனமெனப் பலகுரல்கள் பேணும்.
ஊன்றியெழு உயிரிழையில் ஒன்று
கூனிரியக் குற்றுயிராய் நின்று
மேனிக்குள் மூட்டுகின்ற தீ என்று
பனிக்குள் ஒரு சூட்டைக் கண்டு
பதைக்கிறது உள்ளம்.
***
***
No comments:
Post a Comment