Saturday, February 27, 2016

யார் நான்

நானாக இருக்கும் அந்த நபர் யார்? 
கண்ணாடியில், காட்சியில்
அச்சுப் படத்தில் தெரியும் உருவம்
என்னைத்தான் சொல்கிறது என்று
நானே கஷ்டப்பட்டுத்தான்
நம்ப வேண்டியிருக்கிறது. 
புறவயமாய் எனக்கு நான் தெரியும் சாத்தியம்
ஒட்டவில்லை ஆனாலும் உண்மைதான்
என்பது ஏனோ மூட நம்பிக்கை போல்
எனக்கே தொனிக்கிறது. 
அகவயமாய் நான் உணரும் நான்
அதுதான் என் அடையாளம்
என் ஐக்கியச் சுயம் என்றால்
ஓ ஆதி முதல் இன்றுவரை
இனி மீதியுள்ள காலம் எலாம்
எங்கு பார்த்தாலும்
கொட்டிக் குவிந்து எழுந்து
ஏன் என்று கேட்க
எத்தனை எத்தனை நான்
இதில் எது நான் 

அகவயத்திற்கும் புறவயத்திற்கும் நடுவே
இரணிய மேடையில்
தூணாகி நிற்கும் நானும்
துண்டாகி நிற்கும் நானும்
தொடை தாங்கி நிற்கும் மிருகம்
தலைப் பிடரி உலுக்கும் மனிதம்
அலைபாயும் நெஞ்சின் ஆழம்
குலையாத குருதியாய் உணர்வும் பொங்கும்.
நான் என்ற ஒன்றும் தான் என்ற ஒன்றும்
நடுவில் கிடத்திய ஜீவனின் நரசிங்கமாகும். 
நான் என்ற ஒன்றின்
அடையாளம் எங்கும்
தான் என்று நின்று ஒளியும்.
தனியாகி நின்று ஒளிரும்
நான் என்ற பேதைமை பூக்கும். 
நான் என்ற தூணுக்குள் ஒளியும்
தான் என்று உணர்வாகி ஒளிரும்?
ஊன் கீண்ட உயிரெழுந்து உருவாய்
வான் என்ற வடிவாகி விரியும்? 
நான் என்ற புறவயமாய்த் தெரியும்
அடையாளம் நம்பாமல் புன்னகை புரியும். 

***

1 comment: