பரந்த பாறையின் ஓரம் ஒசிந்து
உயர்ந்த செடியின் கிளைக்கவட்டில்
அமர்ந்து ஒரு குருவி உருசொல்லும்
சந்தையின் உட்பொருளாய் நான்,
உருகெழு வானின் உன்மத்த உறுமலாய்த்
திரண்ட கார் கருவாய்த்த மின்னின்
கணக்கூறிட்ட ஒளியில்
பார்வைக்கு வாய்த்த அணங்கின் கச்சு
நெகிழ்த்த பின்னப் பால் வெண்ணீறாய்ப் பிள்ளைப் பிறை,.
சொர்ணமாய் இழைத்த மேலைத் திசையெங்கும்
இருள் போர்த்திய குளிர் சுமந்த கம்பலையாய்த்
திரிதரும் காற்றின் உள்மூச்சென நிமிரும்
பரிவு பசந்த பற்றின் சுணங்காய்ப்
பயிலும் ஆற்றின் கரைநின்றருந்தும் கான்விலங்கு,
வேரில் விரைகின்ற ஈரம்
விண்ணின் தலை நின்றளிக்கும்
வேகத் தழைப்பாய் விரவும்
பைங்கானத் தண்ணளி கானிடை வாய்த்த
கன்னிமைச் சிமிழ்ப்புற நிவந்த சிகரங்கள்
ஆளும் கதிர்க்கரங்கள் வீசிடப் புலர்ந்த கிழக்கு,
அகரம் சிவணிய மொழியின் பிறப்பாய்
அனுதினம் வைகறை
மகர யாழிடை மீட்டிய படுமலைப்
பண்ணாய்ப் பெயுமா மழை.
உகரமாய் உன்னத மௌனப் பொய்கையில்
துஞ்சு நல்லன்னம்,
ஊறிவரும் ஓம்கார உள்ளமுதத் தீஞ்சுவையில்
உறைந்த உணர்வாகி ஓராயிரம் சொல்லளிக்கும்
கரந்த கனவிறந்த கானின் அந்தகார கன நிசப்தம்,
ஆரண்ய அணங்கென அகத்தெழு ஆவேசக் கிளர்வாகிப்
பொழுதெலாம் வியாபிக்கும்
விஸ்மய விதந்த அவஸ்தையாய்
வியர்க்கும் ஆர்ஜவம்;
விண்ணொடு மண் புணர்ந்த யாமம்;
கண்ணொடு பரோக்ஷம் களிகொண்ட காதலாகிக்
காதொடு ககனாந்த கீத நாதலயமான சாப்தபோதம்;
ஸ்பர்ச வேதியென சொல்பட்ட வஸ்துஜாலம்
அப்ராக்ருத ப்ரமோத ஆனந்த ரஸானுபவ
ஸம்ஸ்தான வேதியாய்ச் சமைந்த மீமாம்ஸா காலபோதம்,
மதன விலாஸ மனோஹர ரூப ஸஞ்சார
த்யோதக த்வனி பூரித திகந்தம்,
த்விஜ குல கோஷித சப்த சங்கேத துல்ய
சுபர்ண ஜ்ரும்பித சுநாத ராக ஜன்ய கீத கோலாஹலம்,
வன இருள் முடைந்திடு
இலைமலி கிளையிடை
புழையிடம் நுழைதரு
கதிர்வரு பிதிர்வினில்
கோடானுகோடி கிருமி ஜால கோணிடை
உள்நிலவு உயிர்க்கு உயிராய் நிலைபெறு
உணர்விடை எழுதரு
உளத்திடை எழுந்தருள்
கணமதும் எதுவென
கருணையில் அருள்தரு
கருத்தினில் காத்தருள்
காலமாம் வனத்தினில்
அண்டக் கோலமா மரத்தினில்
மீதுலவி ரீங்காரமிடு
காளிசக்தி என்றவொரு வண்டே.
***
No comments:
Post a Comment