Saturday, February 27, 2016

கவிதைக்கான ஆற்றுப்படை

கவிதைக்கு வழிசொல்லி
ஆற்றுப் படுத்துகின்ற
கவியாற்றுப் படையீதாம்.
கள்ளம் அவிழக் காலம் கனிவதற்கே
மெள்ளக் குமுறும் மனக்குறையோ
விள்ளற் கரிதாம் விடம்பனமோ
தள்ளற்கரிதாம் என உரைப்பேன்
விற்பதற்கோ வாங்குதற்கோ
எற்றுக்கு நீர் செல்வீர்?
கற்றவித்தை காட்டிக்
கரகாட்டம் ஆடுதற்கே
கூட்டத்தின் நடுவே
கோணல் மேடை தானுமுண்டு. 
பா தொடுத்த பொருள் எல்லாம்
பண்ட மாற்று முறைதானே
புழக்கத்தில் ஆதிமுதல்
கவிதையுள்ளம் கையிருப்பு
கவிதை உங்கள் சரக்கெடுப்பு 
பண்டம் கவியுள்ளம்
மாற்றிக்கொள் வியாபாரம் 
கவிதையிலே சிந்துகிற
சக்கைச் சருகு குப்பை
சுற்றிவந்த காகிதம்
பொக்கைப் புழுதிப்
பொதிந்து வைத்த மரத்தூளாய்ச் 
செல்லும் வழியெல்லாம்
சிந்திக்கிடக்குமங்கே 
செலவின்றி அவற்றினிலே
ஏதேனும் அள்ளிவரலாம் 
குந்தி விரித்திட்டுக் கடைபரப்பிக்
கோணியிலே கட்டிவந்த
குப்பையெலாம் விற்றிடலாம் 
கிடைத்தவரை கொள்ளைதான் 
ஆகமொத்தம் கவிராயா!
சரக்கிருந்தால் கவிதைக்குச் சென்றிடுக
சரக்கோ கவியுள்ளம்
பண்டமாற்று வியாபாரம்.

***

No comments:

Post a Comment