ஏங்குகின்ற உள்ளமென ஏற்றும் இயற்கையெலாம்
தாங்குளிரத் தாபம் அகற்றித் தவமுனிவன்
ஓமொளிர உள்ளடங்கி உட்கார்ந்த பெற்றியென
ஓங்கிப் படர்ந்தே உருவான மௌனத்தில்
தாங்கிக் கிளைபரப்பித் தான்நின்ற போதிமரம்
ஏனோ சிரிக்கிறது ஏதேதோ சொல்கிறது
வானும் கவிந்து வெறிச்சோடிப் பார்க்கிறது
கானத்துப் புள்ளெல்லாம் கேளா ஒலிக்குறிப்பில்
போதிமரப் புன்சிரிப்பின் பூடகத்தில் கூடடங்கிச்
சோதித் திருவாய் மலரச் சுகங்காக்கும்
சுந்தரப்பொன் வட்டில் சுவர்பொங்கிச் சோதியெழ
அந்தரத்தில் ஆதவனார் ஆகாசப் பாய்விரித்தார்
நள்ளிரவில் நீர்மையினால் மண்குளிர்ந்த வாடையெங்கும்
வள்ளல் விரிகதிர்க்கு வேளாண்மை செய்துவக்கும்
பள்ள மடையாகிப் பாய்கின்ற நீர்சுமக்கும்
தெள்ளு கயமாகித் தீங்கதிரைத் தான்சுமக்கும்
எள்ளி நகையாடி ஏய்க்கும் உலகுதனின்
கள்ளம் வெளியான காரணமும் புன்சிரிக்கும்
தானென்ற ஒன்று தனியாக இல்லையென
நானற்ற நல்கணத்தில் நிர்வாணம் ஆகிநிற்கும்
போதி மகத்துவத்தின் பொல்லாங்கு புன்னகைக்கும்
போதி மரத்திற்கே போந்த பொருளதனை
வாதித்துப் பெற்றிடவே வாக்கதுவும் நாணிநிற்கும்
சேதி உரைத்திட்டுச் சையோகச் சைதன்யம்
மீதி உரைப்பதற்குள் மௌனக் கருவாய்க்கும்
ஆதியொடு அந்தம் அகத்தினிலே கண்டுவந்த
போதிப் பெருமகனார் போந்தபொருள் கண்டதனால்
ஓதும் பெருமரத்தின் ஓங்கு தருநீழல்
விட்டகன்ற வக்கணத்தே எட்டுத் திசையெழுந்த
அட்டகாசத் தொன்றாமிப் பா.
***
No comments:
Post a Comment