ஷேக்ஸ்பியர் வேணுவிற்கு
எவான் நதிக்கரையில்
கலைவாணியின் கையேட்டை
காலப் பறவை
தூக்கிக் கொண்டுபோய்ப் போட்டுவிட்டது.
கலையின் தேவதைகள்
கார்த்திகைப் பெண்டிராகி
வில்லி எனும் பையனைப்
பாலூட்டி வளர்த்து விட்டார்கள்.
படைக்கும் கடவுளரோ
படைத்தலுத்துப் போனதினால்
மேடையிலே படைக்கின்ற நான்முகனைப்
பார்த்துப் பூரித்துப் போனார்கள்;
கையிலாடும் மானை அவன் திருடிப் போனதினால்
கைலை ஆடும் ஈசனார்
குளோப் தியேட்டரில் நாடகம் ஆடப் போனாராம்.
நாடகமா? அல்லது படைப்புப் புத்தகத்தின்
மூலப் பிரதி அதுவா?
விட்டு வைத்த வாழ்க்கை
எதுவென்று தேடி விட்டுணுவார்
கதையின் பானைகளில்
கைவிட்டுத் துழாவுகின்றார்;
காலத்தைக் கட்டிச் செக்காட்டும்
ஷேக்ஸ்பியரோ
எந்நூற்று ஆண்டுதான் ஆனால் என்?
இன்னுமொரு நூற்றாண்டும்
இனிவரும் பல் நூற்றாண்டும்
இருக்கத்தான் போகின்றார்;
அதுவரையில் இருண்டகாலம்
இல்லையென்ற நிச்சயத்தில்
இருநிலமாம் ஒண்மடந்தை
ஒளிநிலமாம் சொல்மடந்தை
ஒய்யாரமாய் ஒருவர் அழகை
ஒருவர் ரசிக்கும் உன்மத்தக்
காட்சியினைக் கண்டேனா!
உளறாமல் என்செய்வேன்?
உள் அறாமல் உவகை பூப்பதுவே.
இப்படிக்கு என்றும் எவான் நதிச்செல்வன்
ஒப்படைத்த கையேட்டை உம்மால் கற்ற
***
No comments:
Post a Comment