நடக்கப் பயின்று
சமன் குலைந்து விழுந்த தருணங்களில்
உன் பூமடி படியும் பொன் தாதுவாய்
என் நாடித் துடிப்புகள் நகைக்கும்;
தென்னங்கீற்றிசை
தாங்காமல் அதை அரட்டும்;
தானும் ஒப்பியதாய்க்
கிளத்திய அணிலை அணில் விரட்டும்;
வானும் விழுந்து நகைக்கும்
என்றந்த இடியும் உகைத்த
மின்னின் புன்முறுவல்
கண்ணிமை வெருட்டும்;
காணாமல் கோணிக் கண்டு நகையாடும்
கள்ளநிலா மெள்ளத் தன் முகம் மறைக்கும்;
பேணாமல் விட்ட பெருங்காடு
பார்பூத்த காமமெனப் பரந்து தழைக்கும்;
சேணுயர்ந்த செக்கர்வான் சல்லாபத்தில்
நாணும் நளினம் நள்ளிருள் மூடத்தேடும்;
பாண் தேடும் விறலியாய்
ஆண்புட்கள் பாடியே தம் துணையைத் தேடும்;
ஊண்மறந்த குழவியாய் உள்ளம் அலைக்கும்;
வேண்பெரிய மாநிலம் விரியும் பகல்;
நாணிச் சிவந்த நேரிழையின்
கச்சடர்த்தக் களியெழில் பிறைக்கோடன்ன
உச்சிக்குள் சென்றுறைத்த உட்பொருளை
மெச்சி மனம் குதப்பும் வார்த்தைகளின்
விளிம்பில் நடக்கப் பயின்று
சமன் குலைந்து விழுந்த தருணம்
உன் பூமடிமேல் படியும் பொன் தாது.
***
No comments:
Post a Comment